திமுக கூட்டணியில் இருந்து விலக தவாக முடிவு?.. பரபரப்பை கிளப்பிய வேல்முருகன்..
Velmurugan Sparks a Sensation: சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கூடுதல் இடங்கள் வேண்டும் என்பதை திமுகவின் பேச்சுவார்த்தை குழுவிடம் முன்வைத்தோம். ஆனால் இந்த நிமிடங்கள் வரையில் கூடுதல் இடங்களை தருகிறோம் என்கிற தகவல் எங்களுக்கு கிடைக்கவில்லை என வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை, மார்ச் 16: எங்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரும் பிரதான அரசியல் கட்சிகளுடன் தேர்தலில் இணைந்து பயணிப்பது குறித்து ஆலோசிப்போம் என்று கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அக்கட்சியின் அரசியல் தலைமை குழு கூட்டம், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் இணைந்திருப்பதை மறுபரிசீலனை செய்வது, அதிமுக கூட்டணியில் இணைவது உள்பட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிக்க: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் விசிக, கம்யூனிஸ்டுகள்?.. அண்ணாமலை சொன்ன ஷாக் தகவல்!!
4 தேர்தல்களில் திமுகவுடன் பயணித்தோம்:
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நாங்கள் இடம்பெற்று வருகிறோம். இந்தக் கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து இருந்து வருகிறோம். கடந்த 4 தேர்தலிலும் திமுகவின் வெற்றிக்கு, கூட்டணி கட்சியின் வெற்றிக்கு நாங்கள் பாடுபட்டிருக்கிறோம். 234 தொகுதிகளிலும் கட்டமைப்புள்ள ஒரு கட்சியாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வளர்ந்திருக்கிறது. அதனால், நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை நாங்கள் கேட்டபோது சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் உங்களுக்கான இடங்களை தருகிறோம் என்று கூறினார்கள்.




கூடுதல் தொகுதிகள் கேட்டும் பதில் இல்லை:
இந்தநிலையில், சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கூடுதல் இடங்கள் வேண்டும் என்பதை திமுகவின் பேச்சுவார்த்தை குழுவிடம் முன்வைத்தோம். ஆனால் இந்த நிமிடங்கள் வரையில் கூடுதல் இடங்களை தருகிறோம் என்கிற தகவல் எங்களுக்கு கிடைக்கவில்லை. தமிழக வாழ்வுரிமை கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதா? திமுகவின் பதிலுக்கு ஏற்ப அவர்களுடன் தொடர்வதா? அல்லது மற்ற கூட்டணியில் இணைவது குறித்து முடிவெடுப்பதா? என்பது குறித்தும் முடிவு எடுக்கும் நிலையில் உள்ளோம்.
10 கோரிக்கைகளை முன்வைத்தோம்:
கூடுதல் இடங்கள் கேட்ட அதே நேரத்தில், அதைவிட மேலானதாகத் தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனைகளை 10 கோரிக்கைகளாக முன்வைத்து, இதை நிறைவேற்றித் தருவதைக் குறித்து எங்களுக்கு உரிய பதில் வேண்டும் என்று கேட்டிருந்தோம். அது குறித்து எந்த அறிவிப்புகளும் இதுவரையில் எங்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை.
இதையும் படிக்க : K. Ponmudi Tamil Nadu Election: விழுப்புரத்தில் தொடர் வெற்றியில் திளைத்த க.பொன்முடி… மீண்டும் களமிறக்கப்படுவாரா!
கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளுடன் கூட்டணி:
எங்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரும் பிரதான அரசியல் கட்சிகள் அதிமுக அல்லது கொள்கை அடிப்படையில் ஒருமித்த கருத்துடைய மற்ற அரசியல் கட்சிகள் முன்வரும்போது அவர்களோடு சேர்ந்து தேர்தலில் பயணிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற மாட்டோம். தவெக, நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணியில் பயணிப்பதற்கான வாய்ப்பு இப்போது இல்லை. எங்களுடைய கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசிப்பார் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.