சிலிண்டர் தட்டுப்பாடு: கோயம்பேடு வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு.. என்ன நடந்தது?
Stockpile Rises at Koyambedu Market:ஹோட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி உணவகங்கள் செயல்படாமல் இருப்பதால் கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் சுமார் 2000 டன் அளவுக்கு வெங்காயம், தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் சந்தையில் தேங்கி கிடக்கின்றன என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான்–இஸ்ரேல் இடையேயான போர் பதற்ற சூழ்நிலை காரணமாக எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு பரவலாக காணப்படுவதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களை பயன்படுத்தும் ஹோட்டல்கள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள பல பெரிய ஹோட்டல்கள் தங்கள் விற்பனை பட்டியலில் இருந்த பல்வேறு உணவுகளை தற்காலிகமாக நிறுத்தி, சில குறிப்பிட்ட உணவுகளை மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் விற்பனை செய்யும் நிலை உருவாகியுள்ளது. சிறிய ஹோட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் பல இடங்களில் கேஸ் கிடைக்காததால் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஹோட்டல்களுக்கு தேவையான காய்கறிகளின் வாங்கும் அளவு திடீரென குறைந்து, காய்கறி சந்தை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் தேக்கம்
சென்னையின் முக்கிய மொத்த காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் நாள்தோறும் சுமார் 2000 டன் அளவிற்கு காய்கறிகள் தேக்கமடைந்து வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வழக்கமாக ஹோட்டல்களில் சமைப்பதற்காக இரண்டாம் தர வெங்காயம், தக்காளி மற்றும் பல்வேறு காய்கறிகள் மூட்டை மூட்டையாக வாங்கி செல்லப்படும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஹோட்டல்களின் செயல்பாடு குறைந்ததால் இந்த வாங்குதல் பெரிதும் குறைந்துள்ளது. இதனால் சந்தையில் காய்கறிகள் அதிக அளவில் தேங்கி கிடக்கும் நிலை உருவாகியுள்ளது.
முதல் தரம், இரண்டாம் தர காய்கறிகளின் பயன்பாடு
பொதுவாக கோயம்பேடு சந்தையில் முதல் தரத்தில் உள்ள காய்கறிகளை சிறிய வியாபாரிகள் வாங்கி சென்று 5 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை வைத்துப் விற்பனை செய்வதும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துவதும் வழக்கம். ஆனால் ஓரிரு நாட்களில் பயன்படுத்தாவிட்டால் வீணாகக்கூடிய இரண்டாம் தர காய்கறிகளை ஹோட்டல்கள் அதிகமாக வாங்கி சமைப்பதற்கு பயன்படுத்துவார்கள். தற்போது ஹோட்டல்களின் செயல்பாடு குறைந்ததால் இந்த வகை காய்கறிகள் அதிகமாக தேங்கி கிடப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
விலை குறைத்தாலும் வாங்குபவர்கள் இல்லை
சந்தையில் காய்கறிகள் அதிகமாக இருப்பதால் விலை குறைத்து விற்க முயற்சித்தாலும் வாங்குபவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கடந்த சில நாட்களாக விற்பனை செய்யப்பட்ட அதே விலைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போதைய விலையை விட மேலும் குறைத்து விற்பனை செய்ய முயன்றாலும் அதிக அளவிலான காய்கறிகளை வாங்க ஆள் இல்லாததால் சந்தையில் தேக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் டன் கணக்கில் காய்கறிகள் வீணாகி குப்பைக்கு செல்லும் அபாயம் இருப்பதாகவும் வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.
Also Read: சிலிண்டர் தட்டுப்பாடு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை
காய்கறிகள் வீணாகும் நிலையை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேஸ் தட்டுப்பாட்டை சரி செய்யவும், ஹோட்டல்கள் இயல்புநிலைக்கு திரும்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் காய்கறி சந்தையில் மீண்டும் விற்பனை சீராகும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இல்லையெனில் தொடர்ந்து காய்கறிகள் தேங்கி, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இருவருக்கும் பெரிய இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.