தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!
Tamil Nadu weather today : தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் கணித்துள்ளது.
சென்னை, செப்டம்பர் 07: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. ஏற்கெனவே, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தமிழகத்தில் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அது தொடர வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதையும் படிக்க : உள்ளாட்சித் தேர்தல் முதல் பொதுக்குழு வரை.. அதிமுக மா.செக்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. மூத்த நிர்வாகிகள் புறக்கணிப்பு..
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (செப்.07) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
வரும் நாட்களில் மழை நிலவரம்:
தொடர்ந்து, செப்.08 மற்றும் 09ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதேபோல் செப்.10ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
தொடர்ந்து, செப்.11 மற்றும் செப்.12ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:
செப்.07 இன்று உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. தொடர்ந்து, செப்.10ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை இன்று முதல் செப்.10ம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதையும் படிக்க : திடீர் மின் கட்டண உயர்வா?.. களத்தில் இறங்கும் மின்வாரியம்.. ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு!!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.