அரிசிகளை பதுக்கும் சில அரசியல் கட்சியினர் – அமைச்சர் வெங்கட்ரமணன் பரபரப்பு தகவல்
Tamil Nadu Rice Price Hike : தமிழகத்தில் அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதற்கான காரணங்கள் குறித்து உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் பொன்னி அரிசியின் வரத்து குறைந்துள்ளதே விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை, அக்டோபர் 14 : தமிழகத்தில் அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதற்கான காரணங்கள் குறித்து உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகா (Karnataka) மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் பொன்னி அரிசியின் வரத்து குறைந்துள்ளதே விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அரிசி கிடைக்கும் வகையில், தமிழகத்தில் விளையும் சன்னரக அரிசியை அமுதம் அங்காடிகள் மற்றும் கூட்டுறவு சங்கக் கடைகள் மூலம் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அரிசி விலை உயர்வு ஏன்?
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கட்ரமணன், தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரம், அரிசி மற்றும் துவரம் பருப்பின் விலை உயர்வு, நெல் கொள்முதல் அளவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கமளித்தார். பொதுமக்களுக்குத் தேவையான பொருட்கள் ரேஷன் கடைகள் மற்றும் அரசின் விற்பனை நிலையங்கள் மூலம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க : கோவையில் மின் இணைப்புக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்.. பொறி வைத்த ஊழல் தடுப்பு போலீஸ்.. வணிக ஆய்வாளர் உள்பட இருவர் அதிரடி கைது!




தமிழகத்தில் அரிசியின் விலை அதிகரிப்பதற்கு வெளிமாநிலங்களில் இருந்து கிடைக்கும் அரிசியின் வரத்து குறைந்திருப்பது முக்கியக் காரணமாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்கு விற்பனைக்காகக் கொண்டுவரப்படும் பொன்னி அரிசியின் வரத்து குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் சன்னரக அரிசியைப் பயன்படுத்துவோர் அதிகமாக உள்ளனர். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அரிசி கொண்டுவரப்படுகிறது. ஆனால், அங்கிருந்து கிடைக்கும் வரத்து குறைவதால் சந்தையில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும், அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் விளையும் சன்னரக நெல்லின் உற்பத்தி மற்றும் கொள்முதலை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அரிசி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், தமிழகத்தில் விளையும் ஒரு லட்சம் மெட்ரிக் டன் சன்னரக அரிசியை அரசின் விற்பனை நிலையங்கள் மூலம் குறைந்த விலையில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இதையும் படிக்க : தென்காசி மாவட்ட மக்களே நோட் திஸ்.. நாளை மறுநாள் மின் தடை.. முழு விவரம் இதோ!
சந்தையில் அரிசியின் விலை உயரும்போது, சிலர் அரிசியைப் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். குறிப்பிட்ட சில கட்சித் தலைவர்களுடன் தொடர்புடைய அரிசி ஆலைகள் மற்றும் கடைகள் மூலமாகப் பதுக்கல் நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகளின் விசாரணை அல்லது தனிப்பட்ட ஆதாரங்கள் இந்தச் செய்தித் தகவலில் குறிப்பிடப்படவில்லை. அரிசி பதுக்கலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், மாவட்டந்தோறும் ஏழு பேர் கொண்ட குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதில் பிற துறைகளும் இணைந்து கண்காணிக்கும் எனக் கூறினார்.