கோவையில் மின் இணைப்புக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்.. பொறி வைத்த ஊழல் தடுப்பு போலீஸ்.. வணிக ஆய்வாளர் உள்பட இருவர் அதிரடி கைது!
Pollachi Commercial inspector and lineman arrested : பொள்ளாச்சியில் மின் இணைப்புக்கு ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்துறை வணிக ஆய்வாளர் மற்றும் லைன்மேன் ஆகிய இருவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பட்டினம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். விவசாயியான இவர், கடந்த ஜூலை மாதம் போர்வெல்க்கு தேவையான மின் இணைப்பு கோரி தாமரைக்குளம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு விவசாயி சுரேஷ் நேரில் சென்று தனது மின் இணைப்பு தொடர்பான விண்ணப்பம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு, பணியில் இருந்த மின்வாரிய வணிக ஆய்வாளர் வேல்முருகன் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி சுரேஷ் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், அதனை ஏற்காத வணிக ஆய்வாளர் வேல்முருகன் பணம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மின் இணைப்புக்கு ரூ. 6 ஆயிரம் லஞ்சம்
இதனால், மேலும் அதிர்ச்சி அடைந்த விவசாய சுரேஷ் அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர், மறுநாள் சுரேஷை செல்போன் மூலமாக தொடர்பு கொண்ட வணிக ஆய்வாளர் வேல்முருகன் தான் கேட்ட பணம் தயாராகி விட்டதா. எப்போது தருவீர்கள் என்று மிரட்டும் தோனியில் பேசியதாக தெரிகிறது. அப்போது, தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று விவசாயி சுரேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், வணிக ஆய்வாளர் சுரேஷ் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
மேலும் படிக்க: மனைவியுடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய சென்னை தவெக பிரமுகர்.. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்!
ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள்
இதை தொடர்ந்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ் இது தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ரசாயன பொடி தடவப்பட்ட ரூ. 6 ஆயிரம் நோட்டுகளை சம்பந்தப்பட்ட மின்வாரிய ஆய்வாளரிடம் வழங்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், விவசாயி சுரேஷ் தாமரைக் குளம் மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்று வணிக ஆய்வாளர் வேல்முருகனிடம் ரூ. 6 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.
வணிக ஆய்வாளர்- லைன்மேன் அதிரடி கைது
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக அலுவலகத்தின் உள்ளே நுழைந்து வணிக ஆய்வாளர் வேல்முருகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதே போல, ரூ. ஆயிரம் லஞ்சம் கேட்ட லைன் மேன் நவீன் குமார் என்பவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, இருவர் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: “எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா” குறுகலான பாதையில் சிக்கிய கார்… காரணம்.. “That கூகுள் மேப்”