லஞ்சம் வாங்கப்பட்டால் புகாரளிக்க வாட்ஸ்அப் எண் – தமிழக அரசு அதிரடி
WhatsApp : அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டால் புகார் அளிக்க தனி வாட்ஸ்அப் சேவை எண்ணை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் லஞ்சம் தொடர்பாக புகாரளிக்க வேண்டும் என்றால் 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகாரளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜூலை 15 : அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டால் புகார் அளிக்க தனி வாட்ஸ்அப் சேவை எண்ணை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் லஞ்சம் தொடர்பாக புகாரளிக்க வேண்டும் என்றால் 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகாரளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் உடனடியாக இந்த வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
லஞ்சம் வாங்கப்பட்டால் புகாரளிக்க வாட்ஸ்அப் எண்
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தலைமை அரசு அலுவலர்களுக்கு தலைமை செயலாளர் எம். சாய் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு ஊழியர்கள் குறித்து 9498180936 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் புகார் அனுப்பலாம். அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில், லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பலகைகளைத் தெளிவாக வைக்குமாறு அரசு துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் இடம்பெறும் சூழல்”.. பரபரப்பை கிளப்பிய சிபிஐ வீரபாண்டியன்!!




மேலும் அந்த அறிக்கையில் லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்ற வாசகம் அடங்கிய பலகைகளை அனைத்து அரசு அலுவலகங்களிலும் கட்டாயம் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், பல அலுவலகங்களில் இவை முறையாகப் பின்பற்றப்படவில்லை. எனவே, இந்த முறை இதை சரியாக செயல்படுத்தி, அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று துறை தலைவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
9498180936 என்ற வாட்ஸ்அப் எண்,லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் இணையதள முகவரி ஆகியவை அனைத்து அரசு அலுவலக இணையதளங்களிலும் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் லஞ்சம் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப் மட்டுமில்லாமல் கீழே உள்ள வழிகளிலும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தங்கள் புகார்களை மின்னஞ்சலாக அனுப்பலாம். மேலும் 044-22321090, 22321085, 22310989, 22342142 என்ற தொடர்பு எண்கள் மூலமாக தொடர்பு கொண்டும் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
இதையும் படிக்க : ரூ.100 கோடி பழனி முருகன் கோவில் நில மோசடி புகார்.. “டிசைன் டிசைனா ரீல் சுத்தாதீங்க”.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்!!
அது மட்டுமல்லாமல் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, எண் 293, எம்.கே.என் சாலை, ஆலந்தூர், சென்னை 600016 என்ற முகவரிக்கு நேரில் வந்தோ அல்லது தபால் மூலமாகவோ தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். மேலும், லஞ்ச ஒழிப்பு தொடர்பான அரசின் உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள ஆய்வு பிரிவுகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.