தமிழகத்தில் 15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க அனுமதி – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
தமிழகத்தில் புதிதாக 10 தனியார் பள்ளிகளுக்கு தொடக்கநிலை அனுமதி ஆணைகளையும், 15 சிபிஎஸ்இ, இதர வாரிய பள்ளிகள் தொடங்குவதற்கான தடையில்லா அனுமதி சான்றுகளை பள்ளிக் கல்வி , தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.
சென்னை, ஜூலை 15 : தமிழகத்தில் 10 தனியார் பள்ளிகளுக்கு தொடக்கநிலை அனுமதி ஆணைகளையும், 15 சிபிஎஸ்இ, இதர வாரிய பள்ளிகள் தொடங்குவதற்கான என்ஓசி சான்றுகளையும் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை ஜூலை 14, 2026 நேற்று வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் மாநில தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரியப் பள்ளிகள் செயல்படுகின்றன.
தமிழகத்தில் 15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க அனுமதி
தனியார் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதியும் மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர் அங்கீகாரமும் வழங்கப்படுகிறது. தற்போது புதிய அரசு பெறுப்பேற்ற பிறகு ஏற்கெனவே அங்கீகாரச் சான்று கோரி விண்ணப்பித்த தனியார் பள்ளிகளுக்கு எவ்வித காலதாமதமுமின்றி, அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த ஜூன் 16, 2026 அன்று 848 பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை பள்ளிக்கல்வி அமைச்சர் வழங்கினார். அதைத்தொடர்ந்து, ஜூலை 14, 2026 நேற்று 15 சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகள் தொடங்க தடையின்மைச் சான்றும் , 10 மெட்ரிக் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதி ஆணைகளும் என மொத்தம் 25 ஆணைகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தாளாளர் மற்றும் முதல்வர்களிடம் அமைச்சர் நேரடியாக வழங்கினார்.
தடையில்லா சான்று வழங்கிய அமைச்சர்
மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் இன்று (14.07.2026) தலைமைச் செயலகத்தில், 15 CBSE மற்றும் பிற வாரிய பள்ளிகள் துவங்க தடையின்மைச் சான்றுகளையும், 10 தனியார் பள்ளிகளுக்கு துவக்க அனுமதி ஆணைகளையும் வழங்கினார்.… pic.twitter.com/yYwxv4zJnT
— TN DIPR (@TNDIPRNEWS) July 14, 2026
இந்நிகழ்வின்போது, பள்ளிக் கல்வித்துறை செயலர் பி.சந்திரமோகன், பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தனியார் பள்ளிகள் இயக்குநர் எஸ்.சுகன்யா ஆகியோர் உடனிருந்தனர்.
சிபிஎஸ்இ, மற்றும் பிறவாரிய பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் உள்ளிட்ட தனியார் பள்ளிகளும் தொடங்க அங்கீகாரம் பெற ஜூலை 1, 2026 முதல் http://tnschools.gov.in/dms என்ற இணையதளம் வாயிலாகவும், தொடர் அங்கீகாரம் பெற http://emis.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் ஆன்லைனில் விண்ணப்பித்து அனைத்து ஆவணங்களையும் உள்ளீடு செய்து உரிய ஆணைகளை காலதாமதமின்றி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.