மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. இன்று வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்..
By-Election: செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற பரிசீலனையில் 49 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 50 மனுக்கள் ஏற்கப்பட்டன. தற்போது வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால், இறுதி பட்டியலில் எத்தனை பேர் இடம்பெறுகின்றனர் என்பது இன்று தெரியவரும். ஏற்கனவே முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும் பிரச்சாரம் மேலும் தீவிரமடைய உள்ளது
செப்டம்பர் 19, 2026: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 19ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் வெளியிடப்பட உள்ளன.
2 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தல்:
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், தற்போது 7 தொகுதிகள் காலியாக உள்ளன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், அதிமுகவைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதேபோல், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: “தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் நுழைகிறதா?”.. கேள்வி எழுப்பிய உதயநிதி.. விளக்கம் கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!!
5 முனைப்போட்டி:
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக, இடதுசாரி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ளது. மதுராந்தகத்தில் த.வெ.க. சார்பில் மரகதம் குமாரவேல், திமுக சார்பில் ஐ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் பி.சத்யபாமா, திமுக சார்பில் எஸ்.சுகன்யா, அதிமுக சார்பில் கே.பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.கார்த்திகா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இன்று வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்:
செப்டம்பர் 16ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இரு தொகுதிகளிலும் மொத்தம் 99 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற பரிசீலனையில் 49 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 50 மனுக்கள் ஏற்கப்பட்டன. தற்போது வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால், இறுதி பட்டியலில் எத்தனை பேர் இடம்பெறுகின்றனர் என்பது இன்று தெரியவரும்.
மேலும் படிக்க: சென்னை விமான நிலையத்திற்கு வரப்போகும் மாற்றம்?.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தால் பரபரப்பு!!
ஏற்கனவே முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும் பிரச்சாரம் மேலும் தீவிரமடைய உள்ளது. இரு தொகுதிகளிலும் கட்சித் தலைவர்கள் நேரடியாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 6 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், முதலமைச்சரும் த.வெ.க. தலைவருமான விஜய் 4 நாட்கள் இரு தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.