Tamil Nadu ByElection 2026: உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பு.. மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை நடக்கும் வாக்குப்பதிவு.. களம் எப்படி இருக்கும்?
Maduranthakam, Dharapuram Assembly Constituencies Bypoll 2026: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. சட்டப்பேரவைத் தேர்தலைப் போலவே இந்த இடைத்தேர்தலிலும் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
அக்டோபர் 5, 2026: தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (அக்டோபர் 6) நடைபெற உள்ளது. இரண்டு தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதையொட்டி, தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு காலியான தொகுதிகள்:
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், தமிழகத்தில் மொத்தம் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் காலியாகின. தமிழக முதலமைச்சர் விஜய், தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல், பல்வேறு அரசியல் காரணங்களால் அதிமுகவைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதில் மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதியைச் சேர்ந்த இசக்கி சுப்பையா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அடங்குவர்.
இதனால் தமிழகத்தில் மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாகின. எனினும், தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்த தொகுதிகளைத் தவிர்த்து இந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவிய நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
மதுராந்தகம் தொகுதி
மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். திமுக சார்பில் ஐ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதாசன், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். மொத்தம் 27 வேட்பாளர்கள் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் தொகுதி
தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள்:
இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் நேரடியாக களமிறங்கி வாக்கு சேகரித்தனர்.
திமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ், செந்தில் பாலாஜி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் இரண்டு தொகுதிகளிலும் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டனர்.
அதிமுக தரப்பிலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பலர் களமிறக்கப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து பல்வேறு பிரசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தது.
முதல்வர் விஜய்யின் மாறுபட்ட பிரசாரம்
இதுவரை வாகனத்தில் இருந்தபடியே மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்த இடைத்தேர்தலில் தனது பிரசார பாணியில் மாற்றத்தை ஏற்படுத்தினார்.
மேலும் படிக்க: சோஷியல் மீடியா கோடீஸ்வரி-க்கு வந்த சோதனை.. நகை திருட்டு வழக்கில் இன்ஸ்டா பிரபலம் மதுமிதா.. என்ன கொடுமை சாமி!
ரோடு ஷோவில் மட்டுமின்றி, மக்கள் மத்தியில் நேரடியாக உரையாடுவது, அவர்களுடன் அமர்ந்து உணவருந்துவது, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பது என மக்களுடன் நெருக்கமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரம் கூடுதல் கவனம் பெற்றது.
மூன்று கட்சிகளுக்கு இடையே பிரதான போட்டி?
ஐந்து முனைப் போட்டி நிலவினாலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பிரதான போட்டி தமிழக வெற்றிக் கழகம், அதிமுக மற்றும் திமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையேதான் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவைப் பொறுத்தவரை, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது இடத்துக்குச் சென்றிருந்தாலும், இந்த இரண்டு தொகுதிகளிலும் தங்களுக்கு மக்கள் செல்வாக்கு தொடர்ந்து உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலும் படிக்க: தலைநகரில் பிரதமர் மோடியின் மாஸ் என்ட்ரி.. சைதாப்பேட்டை முதல் ஐஐடி வரை பிரம்மாண்ட ரோடு ஷோ.. அதிரப்போகும் சென்னை!
அதிமுகவைப் பொறுத்தவரை, தங்களது பாரம்பரிய செல்வாக்கு கொண்ட தொகுதிகளாகக் கருதப்படும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகியவற்றை மீண்டும் தங்கள் வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாகப் பணியாற்றியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னரும் மக்கள் ஆதரவு தங்கள் பக்கம் தொடர்கிறது என்பதை நிரூபிப்பதற்கான முக்கியமான அரசியல் பலப்பரீட்சையாக இந்த இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.
நிறைவடைந்த பிரச்சாரம் – நாளை வாக்குப்பதிவு
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்திக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவைத் தேர்தலைப் போலவே இந்த இடைத்தேர்தலிலும் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்காளர்கள் அளிக்கும் தீர்ப்பு, இந்த மூன்று முக்கிய கட்சிகளின் தற்போதைய மக்கள் செல்வாக்கை வெளிப்படுத்தும் முக்கியமான அரசியல் களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.