த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்.. பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள் என்ன?
Tamil Nadu Budget 2026-2027: வேளாண் பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் பயிர்க் கடன், சமூகப் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமைப் போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 23, 2026: தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் வரக்கூடிய ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, பட்ஜெட் என்பது அந்த ஆண்டுக்கான மாநில அரசின் வரவு-செலவு கணக்குகளைத் திட்டமிடுவதாகும். இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நிதித் துறை அமைச்சர் சார்பிலும், வேளாண் பட்ஜெட் வேளாண்மைத் துறை அமைச்சர் சார்பிலும் தாக்கல் செய்யப்படும்.
பொது பட்ஜெட்டில் மக்களுக்குத் தேவையான முக்கிய அறிவிப்புகள், மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு, எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.
வெள்ளை அறிக்கையைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல்:
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற உடனேயே மாநிலத்தின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், திமுக ஆட்சிக் காலத்தில் அரசின் வருவாய் எவ்வளவு இருந்தது, செலவு எவ்வளவு இருந்தது, எவ்வளவு கடன் பெறப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெளிவாக இடம்பெற்றிருந்தன. இந்த வெள்ளை அறிக்கை பெரும் விவாதத்தை ஏற்படுத்திய சூழலில், தற்போது தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் மீதான விவாதம்:
ஆகஸ்ட் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் பொருளாதாரக் கொள்கைகள், புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து பல்வேறு விவாதங்களை முன்வைப்பார்கள்.
மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகும். தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும் என்பது குறித்து மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: ஆகஸ்ட் 5ல் தமிழக பட்ஜெட் – சபாநாயகர் அறிவிப்பு
மகளிர் உரிமைத் தொகை உயர்வு?
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றவுடன், மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான பணிகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், விரைவில் 2,500 ரூபாய் உதவித்தொகை அமல்படுத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
மெட்ரோ ரயில் திட்டம், மேம்பாலப் பணிகள், பொதுமக்களுக்குத் தேவையான அறிவிப்புகள், வணிகர்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு, பல்துறை சார்ந்த முக்கிய நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்களுக்கான அறிவிப்புகள் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: தமிழ்நாடு பட்ஜெட் நடைமுறை.. சட்டப்பேரவையில் என்ன நடக்கும்? தாக்கல் முதல் ஒப்புதல் வரை ஒரு பார்வை!
வேளாண் பட்ஜெட்டில் விவசாயக் கடன் தள்ளுபடி?
அதேபோல், வேளாண் பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் பயிர்க் கடன், சமூகப் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமைப் போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேளாண் பட்ஜெட்டைப் பொறுத்தவரையில், விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 75,000 ரூபாய் வரை விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள சூழலில், அதிகக் கடன் பெற்றவர்கள் அல்லது அதிக ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்கான கூடுதல் சலுகைகள் வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எனவே, தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், இது பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது என்றே கூறலாம்.