ஆகஸ்ட் 5ல் தமிழக பட்ஜெட் – சபாநாயகர் அறிவிப்பு
தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என்றும் வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6ல் நடைபெறும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார். தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை முந்தைய திமுக அரசின் நடைமுறையை தொடர்கிறது.
சென்னை, ஜூலை 21 : தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5, 2026 தேதி நடைபெறும் என்றும் வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6, 2026 நடைபெறும் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். மேலும் சட்டப்பேரவை கூடும்போது அதிமுக கொறடா குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை பொறுத்தவரை முந்தைய திமுக அரசின் நடைமுறையை தொடர்கிறது.
ஆகஸ்ட் 5ல் தமிழக பட்ஜெட்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாள், புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை-600 009. தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடவுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181(1)-. 2026-2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்ய நாள் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று காலை 10.00 மணிக்கு 2026-2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : இரண்டாவதும் பெண்.. பச்சிளம் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த பாட்டி!




முதல் நாளில், 2026-27 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். மேலும் ஆகஸ்ட் 6, 2026 அடுத்த நாள், 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். 2 பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். அதற்கு அமைச்சர்களின் விளக்கமளித்து பேசுவர் என்று கூறப்படுகிறது. அதன்பின்னர், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு பொறுப்பேற்று தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் கடந்த திமுக அரசை போல, இந்த முறையும் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் என தனித்தனியாக தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : தவெக கொடி நிறத்தில் அரசு பேருந்து? வைரலாகும் போட்டோவால் வலுக்கும் சர்ச்சை
தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டம் கடந்த ஜூன் 18, 2026 ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23, 2026 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. கடைசி நாளில் முதல்வர் விஜய் பதிலளித்து பேசினார். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.