நவோதயா பள்ளிகளுக்கு முட்டுக்கட்டை?.. “3 மாசம் தான் டைம்!”.. தமிழக அரசுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்!!
Jawahar Navodaya Vidyalaya schools: தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க நிலங்களைக் கண்டறியத் தமிழக அரசுக்கு 3 மாத காலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொழி மற்றும் கல்வி சார்ந்த கொள்கைகளில் மத்திய-மாநில அரசுகளிடையே ஆரோக்கியமான உரையாடல் அவசியம் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை டிசம்பர் 14-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
செப்டம்பர், 17: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவாஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பான வழக்கு நீண்டகாலமாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. மாவட்டம்தோறும் நவோதயா பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இச்சூழ்நிலையில், நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான நிலங்களைக் கண்டறியத் தமிழக அரசுக்கு 3 மாத காலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு, மொழி சார்ந்த நிலைப்பாடுகள் குறித்துத் தமிழக அரசுக்குச் சில முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.
இதையும் படிக்க: பெரியார் பிறந்தநாளில் புகழாரம் சூட்டிய அண்ணாமலை.. திராவிட அரசியலை நோக்கிப் பயணமா? அரசியல் களத்தில் பெரும் திருப்பம்!!
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வாதம்:
விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெயதீப் குப்தா, நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது மாநில அரசின் கல்விக் கொள்கைக்கும் சட்டத்திற்கும் முரணானது என்று சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியான கல்விக் கொள்கை இருப்பதாகவும், பொதுப் பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசின் முடிவுகளுக்கு முன்னுரிமை உண்டு என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் கட்டாயத் தமிழ் கற்றல் சட்டம் அமுலில் உள்ள சூழலில், மத்திய அரசின் இக்கொள்கையை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், மாவட்டம் தோறும் இத்தகைய பள்ளிகளை நிறுவ உத்தரவிட்டால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும் வாதாடினார். அத்துடன், சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான ரூ.5,000 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை என்பதையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
நீதிபதிகளின் கேள்விகளும் அறிவுறுத்தல்களும்:
தமிழக அரசின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மொழி சார்ந்த விஷயங்களில் மாநில அரசு கொண்டுள்ள சில குறிப்பிட்ட மனநிலைகளில் இருந்து விடுபட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். “டெல்லியைத் தமிழ்நாடு அந்நியமாகப் பார்க்கக் கூடாது; அதேபோலத் தமிழ்நாட்டையும் டெல்லி அந்நியமாகப் பார்க்கக் கூடாது” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே கல்வி விவகாரத்தில் ஒரு ஆரோக்கியமான உரையாடல் மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள். தமிழ்நாட்டில் காலப்போக்கில் அணுகுமுறையில் அல்லது சிந்தனையில் மாற்றம் ஏற்படும் என்றும், மாநில அரசின் நிலைப்பாட்டில் நேர்மறையான மாற்றம் வரும் என்றும் நம்புகிறோம் எனவும் கூறினர். மேலும், நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதில் தமிழக அரசுக்கு என்ன உண்மையான சிக்கல் உள்ளது என்றும் அவர்கள் கேள்வியெழுப்பினர்.
இதையும் படிக்க: காதல் வலையில் பெண் காவலர்.. கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட ஆண் காவலர்.. சென்னையில் பரபரப்பு!
3 மாத அவகாசம், அடுத்தகட்ட விசாரணை:
மாவட்டம்தோறும் நவோதயா பள்ளிகளை நிறுவ நிலங்களைக் கண்டறிய பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற முடியாது என்பதைத் தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், நிலங்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கத் தமிழக அரசுக்கு 3 மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. அத்துடன், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்குத் தமிழக அரசு சரணடைந்துவிட்டது என்ற தவறான புரிதல் ஏற்படக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் டிசம்பர் 14-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.