“GOAT படத்துல பிளாக் டிக்கெட் வித்தவன் இன்னைக்கு அமைச்சர்!”.. சீமான் கடும் தாக்கு!!
சென்னை எழும்பூரில் காவிரி நதிநீர் உரிமை மீட்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவிரி விவகாரம், அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு மற்றும் மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையாகச் சாடிப் பேசினார். காவிரி நீரைப் பெறுவதில் தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
சென்னை, ஆகஸ்ட் 08: தமிழ்நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி நதிநீர் உரிமையை மீட்கக் கோரியும், கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டுமான முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் சென்னை எழும்பூரில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் இயக்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவிரி பிரச்சனையில் திராவிடக் கட்சிகளின் மெத்தனப் போக்கையும், தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவின் நிலைப்பாட்டையும் காரசாரமாகச் சாடிப் பேசினார்.
மேலும் படிக்க: விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!
காவிரியில் முதல் துரோகம் செய்தது காங்கிரஸ்:
ஆர்ப்பாட்டத்தில் காவிரி நதிநீர் பிரச்சனையின் வரலாற்றுப் பின்னணியை சுட்டிக்காட்டி உரையாற்றிய சீமான், “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைப் பெறக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், அப்போது மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, கர்நாடக மாநிலத்தில் தங்கள் கட்சியின் ஆட்சிச் செல்வாக்கு பாதிக்கப்படும் என்பதற்காக அந்த வழக்கை திரும்பப் பெறச் சொல்லி கடுமையான அரசியல் நெருக்கடி கொடுத்தது.
அன்றைய அரசு அந்த வழக்கை திரும்பப் பெற்ற கணத்திலிருந்துதான் தமிழ்நாட்டிற்கான காவிரி உரிமைப் பறிபோகத் தொடங்கியது. அந்த வகையில் காவிரியில் தமிழ்நாட்டிற்கு முதல் துரோகம் இழைத்த கட்சி காங்கிரஸ் கட்சிதான்” என்று வரலாற்றுப் பக்கங்களை மேற்கோள் காட்டிப் பேசினார்.
“கொடிதான் வேறு… கொள்கை ஒன்றுதான்:
தொடர்ந்து தேசியக் கட்சிகளைத் தாக்கிப் பேசிய சீமான், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பதில் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் ஒன்றுதான் என்று குற்றம்சாட்டினார். “இவ்விரு தேசியக் கட்சிகளுக்கும் பெயர்களும், கொடிகளும் மட்டுமே வேறுவேறாக இருக்கின்றன; ஆனால் இந்திய இறையாண்மை என்ற போர்வையில் தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளைத் தடுப்பதிலும், கர்நாடகாவிற்கு ஆதரவாகச் செயல்படுவதிலும் இரண்டு கட்சிகளின் கொள்கையும் ஒன்றுதான். கொடிகள் வேண்டுமானால் வேறாக இருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டைப் வஞ்சிப்பதில் இரு கட்சிகளின் முகமும் ஒன்றுதான்” என்று கடுமையாக விமர்சித்தார்.
GOAT படத்தில் பிளாக் டிக்கெட் விற்றவன் அமைச்சர்:
தனது உரையின் போது திரையுலகப் பின்னணியில் அரசியலுக்கு வந்தவர்களைக் கடுமையாகச் சாடிய சீமான், “GOAT படத்தில் பிளாக் டிக்கெட் விற்றவன் இன்றைக்கு ஜனநாயக நாட்டில் அமைச்சர் ஆகிவிட்டான். ஆனால் நாங்களெல்லாம் ஐந்து ஆறு வயதிலிருந்தே களப்போராட்டங்களில் விரலைப் பிடித்துக் கூட்டிச் செல்லப்பட்டு வளர்ந்தவர்கள். மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ், பூலே, அம்பேத்கர், சாக்ரடீஸ், சேகுவேரா, கபிலன், வள்ளுவன் எனப் படித்தும், என் இனச் சாவைக் கண்ணெதிரே பார்த்தும் ரத்த சகதிக்குள் கருக்கொண்டு வந்தவர்கள். என் மீது 260 வழக்குகள் இருக்கின்றன; அவை எதுவும் சொத்துக் குவிப்போ கொலையோ கிடையாது, மக்களின் உரிமைக்காகப் போராடிய வழக்குகள்” என்று ஆவேசமாகப் பேசினார்.
மேலும் படிக்க: அவையில் அப்பாவை காணோம் என கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டத் தயங்குவது ஏன்?
கர்நாடக அரசின் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய சீமான், “கர்நாடகாவில் உள்ள பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என அனைத்துக் கட்சிகளையும் கூட்டி மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆலோசனை நடத்துகிறார். ஆனால், பாதிக்கப்பட்ட மாநிலமான தமிழ்நாட்டின் முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுக்கிறார். கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி மேகதாதுவில் அணை கட்டுவேன் என்று சொல்வதால், அவர்களை வைத்துக்கொண்டு எப்படித் தனித் தீர்மானமோ கூட்டமோ நடத்துவது என்ற பயத்தில் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டித் தலைநகரில் நமது ஒருமித்த எதிர்ப்பைக் காட்டினால் மட்டுமே ஒன்றிய அரசிற்கும் கர்நாடகாவிற்கும் அழுத்தம் கொடுக்க முடியும்” என்று கூறினார்.