அரசுப் பள்ளிகளில் மாநில கல்வி கொள்கை பாடத்திட்டங்கள்… ஆக.31 வரை கருத்து தெரிவிக்கலாம்.. பள்ளிக்கல்வித்துறை!
Tamil Nadu State Education Policy Ccurriculum : தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் இதுதொடர்பான கருத்துக்களை ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில கல்வி கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட இருப்பதாகவும், இது தொடர்பான கருத்துக்களை வருகிற ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி கல்விக்கான தமிழக மாநில கல்விக் கொள்கை 2025- இன் அடிப்படையில் புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்குவதற்காக பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் உயர்மட்ட வல்லுனர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
6- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை
இந்த குழுக்களில் உள்ளவர்கள் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தமிழக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக 6- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்தப் பாடத் திட்டங்களை கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் பள்ளி கல்வித் துறை இணையதளத்தில் https://tnschool.gov.in நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20- ஆம் தேதி) முதல் பார்க்கலாம்.
மேலும் படிக்க: தென்காசியில் ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர்.. கையும் களவுமாக தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!




பாடத்திட்டம் தொடர்பான கருத்தை தெரிவிக்கலாம்
இந்த பாடத்திட்டம் தொடர்பாக ஏதேனும் கருத்துக்கள் கூற விரும்பினால், அதனை https://tnschool.gov.in என்ற பள்ளி கல்வித் துறை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைய வழி படிவத்தின் வாயிலாக, தங்களது சுய விவரங்களை பதிவிட்டு, தங்களது கருத்துக்களை குறிப்பிட்டு வருகிற ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் ( திங்கள் கிழமை) அனுப்பலாம் என்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய பாடத்திட்டம் எதற்காக
தமிழகத்தில் மாணவர்கள் மனப்பாடம் செய்யும் முறைக்கு பதிலாக ஆக்கபூர்வமான மற்றும் திறன் அடிப்படையில் ஆன புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழக சமூக, பண்பாட்டு சூழலுக்கு ஏற்ப மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மனப்பாடம் செய்வதை தவிர்த்து சிந்தனை திறன் மற்றும் அனுபவ கற்றலை ஊக்குவிக்க வழிவகை செய்யப்படுகிறது. தற்போது, இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான கருத்துக்களை பள்ளிக் கல்வித் துறை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “விஜய் மாமா” எனது அப்பா இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.. கர்நாடகாவில் சுட்டு கொல்லப்பட்டவரின் மகள் உருக்கமான வீடியோ!