அண்ணா அறிவாலயம் அமைந்திருப்பது பஞ்சமி நிலமா? புகார் வந்தால் நடவடிக்கை – எஸ்சி, எஸ்டி ஆணையத் தலைவர் உறுதி
Anna Arivalayam Panchami Land Controversy : திமுவகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் (Anna Arivalayam) அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம் என புகார் வந்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.சி, எஸ்.டி. ஆணையத்தின் புதிய தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, நவம்பர் 17 : திமுவகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் (Anna Arivalayam) அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம் என புகார் வந்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.சி, எஸ்.டி. ஆணையத்தின் புதிய தலைவர் முரளிதரன் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி முரளிதரன் நவம்பர் 17, 2026 இன்று பொறுப்பேற்றார்.
அண்ணா அறிவாலயம் அமைந்திருப்பது பஞ்சமி நிலமா?
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முரளிதரன், “தமிழ்நாடு எஸ்.சி, எஸ்.டி. ஆணையம் 2022 ஆம் ஆண்டு செயல்பாட்டு வந்தது. இதுவரை 9 ஆயிரத்து 169 புகார் மனுக்கள் ஆணையத்திற்கு வந்திருக்கின்றன. அவற்றில் 6,173 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,996 புகார் மனுக்கள் தற்போது நிலுவையில் இருக்கின்றன. அவற்றுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
இதையும் படிக்க : உருவானது அக்வான் புயல்.. தமிழகத்திற்கு கனமழை வாய்ப்பு குறைகிறதா? ஆந்திரா நோக்கி நகரும் புயல்




பள்ளி, கல்லூரி, அலுவலகம் போன்ற பணியிடங்களில் சாதியப் பாகுபாடு இருப்பது, சாதியின் காரணமாக பதவி உயர்வு மறுக்கப்படுவது, ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம், காதலித்து விட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்ய மறுப்பது, காதலித்து திருமணம் செய்த பின்னர் சாதிய வன்கொடுமை செய்து ஒதுக்கி வைப்பது, எஸ்.சி, எஸ்.டி. மக்களை சாதிப் பெயரை சொல்லி இழிவுபடுத்துவது போன்றவற்றுக்கு நமது ஆணையம் தீர்வு கண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
புகார் வந்தால் நடவடிக்கை
பஞ்சமி நிலம், நிபந்தனை பட்டா, பூமிதான நிலங்கள் ஆகியவற்றை பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் பயன்படுத்த இயலாத வகையில் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதனை அகற்றும் நடவடிக்கையில் நாம் ஈடுபட்டு வருகிறோம் என்றார். அப்போது பத்திரிகையாளர்கள் திமுக தலைமையகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அண்ணா அறிவாலயம் அமைந்திருப்பது பஞ்சமி நிலம் என புகார் வந்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் பேசய அவர், இதுபோன்ற பல்வேறு புகார்களுக்கு ஆணையம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எந்த காரணத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார்கள் வரவில்லை என்றாலும் பல இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் சாதிய வன்கொடுமை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் னஎ்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : டெல்லியில் பரபரப்பு.. சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் பின்வாசல் வழியாகச் சென்ற முதல்வர் விஜய்!
பஞ்சமி நிலம் தொடர்பாக எந்த புகார்களும் தற்போது வரை எங்களுக்கு வரவில்லை. அதேபோல, தமிழ்நாட்டில் எவ்வளவு பஞ்சமி நிலம் உள்ளது என்ற தகவலும் இல்லை. பஞ்சமி தொடர்பாக புகார் அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என முரளிதரன் தெரிவித்தார்.