AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சவுதியில் சுடப்பட்ட தமிழக மீனவர்.. பேரவையில் பேச அனுமதி மறுப்பு.. அதிமுக வெளிநடப்புக்கு பின் இபிஎஸ் ஆவேசம்!!

Edappadi Palaniswami Speech: சவுதியில் ஈரானியக் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் உடலை மீட்கக் கோரும் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுக வெளிநடப்பு செய்தது. தமிழர்களைக் காப்பதாகக் கூறும் அரசு, வெளிநாட்டில் சுடப்பட்ட தமிழனின் உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சவுதியில் சுடப்பட்ட தமிழக மீனவர்.. பேரவையில் பேச அனுமதி மறுப்பு.. அதிமுக வெளிநடப்புக்கு பின் இபிஎஸ் ஆவேசம்!!
எடப்பாடி பழனிசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Aug 2026 11:34 AM IST

சென்னை, ஆகஸ்ட் 19: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஈரானிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகச் சட்டமன்ற பேரவை விதி எண் 55-ன் கீழ் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர அதிமுக சார்பில் கோரப்பட்ட நிலையில், அதற்குப் பேரவைத்தலைவர் அனுமதி வழங்க மறுத்ததாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிக்க: “இலவச காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்வு முதல் MLAக்களுக்கு கார் வரை”.. சட்டப்பேரவையில் முதல்ர் விஜய்யின் பிரம்மாண்ட அறிவிப்புகள்!!

3 மீனவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை:

வெளிநடப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, இச்சம்பவத்தின் தீவிரத்தை விவரித்தார். மயிலாடுதுறை மாவட்டம் திருமலைவாசல் ஊராட்சி தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் (38), பால்ராஜ், சங்கர் மற்றும் கடலூரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய 4 தமிழக மீனவர்கள் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஆகஸ்ட் 12 அன்று, ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாவீரன் நெற்றியில் குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 3 மீனவர்களும் படுகாயமடைந்து சவுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 நாட்களுக்கு முன்பே கவன ஈர்ப்புத் தீர்மானம்:

உயிரிழந்த மீனவர் மாவீரனின் உடலைத் தாயகத்திற்குக் கொண்டு வரவும், காயமடைந்த மீனவர்களுக்கு உயர்தரச் சிகிச்சை மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவதையும் வலியுறுத்தி, அதிமுக சார்பில் 5 நாட்களுக்கு முன்பே கவன ஈர்ப்புத் தீர்மானம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “ஐந்து நாட்களாகியும் இந்த முக்கியப் பிரச்சினையைப் பேரவையில் பேச அனுமதி வழங்கப்படவில்லை. குறைந்தபட்சம் இந்த விவகாரத்தைக் குறிப்பிடுவதற்கு கூட சபாநாயகர் வாய்ப்பளிக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

இதையும் படிக்க: ”கண் முன் வந்த கரூர் சம்பவம்!”.. மாநாட்டில் 3 நிமிடத்தில் உரையை முடித்தது ஏன்? திருமாவளவன் உருக்கமான விளக்கம்!!

இந்த அரசு எப்படி மக்களைக் காப்பாற்றப் போகிறது?

“தமிழர்களைக் காப்போம் என்று வாய்மொழியாக மட்டுமே பேசும் தமிழக வெற்றிக் கழக அரசு, வெளிநாட்டில் சுட்டுக்கொல்லப்பட்டு ஒரு வாரமாக சவுதியிலேயே கிடக்கும் தமிழனின் உடலைக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உலகளவில் தமிழர்களுக்கு எங்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் குரல் கொடுப்பதே அரசின் கடமை. ஆனால், வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிவிட்டு, நாடாளுமன்றத்தில் பேசக்கூட அனுமதிக்காத இந்த அரசு எப்படி மக்களைக் காப்பாற்றப் போகிறது?” என்றும், பாதிக்கப்பட்ட மீனவரின் குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றத்தில் இருக்கும் சூழலில், சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் துயரத்தைப் பதிவு செய்யும்போது ஆளும் கட்சியினர் கைதட்டிச் சிரித்துக் கொண்டிருப்பதாகக் கூறியும் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

Follow Us