“இலவச காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்வு முதல் MLAக்களுக்கு கார் வரை”.. சட்டப்பேரவையில் முதல்ர் விஜய்யின் பிரம்மாண்ட அறிவிப்புகள்!!
Free cars for MLAs Tamil Nadu: தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ரூ.677.44 கோடியில் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம், 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வித சமரசமுமின்றி நேர்மையாக தொகுதிப் பணியாற்ற அரசு சார்பில் இலவச கார்கள், மாதம் ரூ.1 லட்சம் படிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 19: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேரவை விதி 110-ன் கீழ் மற்றும் முக்கிய விவாதங்களின் போது மருத்துவத் துறை சார்ந்த பல்வேறு மெகா திட்டங்களையும், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகளை மேம்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சலுகைகளையும் முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டார். திருநங்கைகளுக்கான சிகிச்சை முறைகள் முதல், செவிலியர் இடங்கள் அதிகரிப்பு, புற்றுநோய் தடுப்பு கட்டமைப்பு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் பணியாற்ற உதவும் வகையில் புதிய வாகனங்கள் வழங்கும் திட்டம் வரை பல முக்கிய அறிவிப்புகள் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டன.
இதையும் படிக்க: ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு – முதல்வர் விஜய் அறிவிப்பு
இலவச காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்வு:
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத்தொகை ஆண்டொன்றுக்கு தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும். சுகாதாரத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், திருநங்கையர்களுக்கான சிறப்பு அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவச் சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இனி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையைக் கருத்தில் கொண்டு, ரூ.351 கோடி மதிப்பீட்டில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 660 பி.எஸ்சி செவிலியர் இடங்கள் உருவாக்கப்படும். இதனுடன் சேர்த்து செவிலியர் பள்ளிகள், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் என மொத்தம் 6,098 கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
5 இடங்ளில் மண்டலப் புற்றுநோய் மையம்:
மாநிலத்தில் புற்றுநோயைத் தடுத்து, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயர்தரச் சிகிச்சை அளிப்பதற்காக ‘முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்’ ரூ.677.44 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் கீழ் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.471.80 கோடியில் 14 தளங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையமும், தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய 5 இடங்ளில் மண்டலப் புற்றுநோய் மையங்களும் அமைக்கப்படும். முதற்கட்டமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூ.84 கோடியில் 8 தளங்களுடன் கூடிய மண்டலப் புற்றுநோய் மையம் அமைக்கப்படும் எனவும், அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவிகள் கொள்முதல் செய்ய ரூ.106.17 கோடி ஒதுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ”கண் முன் வந்த கரூர் சம்பவம்!”.. மாநாட்டில் 3 நிமிடத்தில் உரையை முடித்தது ஏன்? திருமாவளவன் உருக்கமான விளக்கம்!!
எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்:
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், எளிய பின்னணியில் இருந்து பணபலமோ அரசியல் பின்னணியோ இன்றி முதன்முறையாகத் தேர்வாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பிறரைச் சாராமல், லஞ்ச லாவண்யமற்ற வெளிப்படையான முறையில் தொகுதிப் பணிகளை மேற்கொள்ள அரசு சார்பில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தொகுதி முழுவதும் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் களைய ஏதுவாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் கார்கள் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், இந்த வாகனத்தைப் பராமரிக்க, ஓட்டுநர் சம்பளம் மற்றும் எரிபொருள் செலவினங்களுக்காக மாதம் ரூ.75,000 வாகனப்படியாகவும், அலுவலகப் பணிகளில் உதவ ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் ரூ.25,000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும் என்றும், இதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார்.