Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகம்-புதுச்சேரியில் பிரதமர் மோடி 2 நாள்கள் விசிட்..பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்கிறார்…குஷியில் பாஜகவினர்!

Prime Minister Narendra Modi: தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதற்காக இரு நாள்கள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகம்-புதுச்சேரியில் பிரதமர் மோடி 2 நாள்கள் விசிட்..பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்கிறார்…குஷியில் பாஜகவினர்!
தமிழகம்-புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 05 Feb 2026 10:44 AM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அந்த மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை மையமாக வைத்து அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில், அன்புமணி தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியில் கிட்டத்தட்ட கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி

அதன்படி, வருகிற பிப்ரவரி 28- ஆம் தேதி ( சனிக்கிழமை) மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல, புதுச்சேரி மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி ( புதன்கிழமை) வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க: இறுதியாகாத கூட்டணி.. தேர்தல் அறிக்கையிலும் தாமதம்.. கனிமொழி கொடுத்த விளக்கம்!!

புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

அதன்படி, புதுச்சேரியில் லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் பிப்ரவரி 11- ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த பொதுக் கூட்டத்தில் புதுச்சேரி மாநில முதல்வர் என். ரங்கசாமி மற்றும் ஆளும் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

2- ஆவது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி

மேலும், புதுச்சேரியில் புதிதாக லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் மார்ட்டினும் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 23-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றியிருந்தார். இந்த நிலையில், 2- ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், பாரதிய ஜனதா கட்சியினர் பெரும் உற்சாகத்தில் திகைத்துள்ளனர்.

மேலும் படிக்க: ராமதாஸ், பிரேமலதா முடிவுக்கு காத்திருக்கும் திமுக, அதிமுக.. நீடிக்கும் இழுபறி!!