“யார் அவசரப்பட்டு ராஜினாமா பண்ண சொன்னது?”.. இசக்கி சுப்பையா விவகாரத்தில் வெளுத்து வாங்கிய பிரேமலதா!!
Premallatha Vijayakanth: யார் அவசரப்பட்டு ராஜினாமா பண்ண சொன்னா?" என இசக்கி சுப்பையாவின் நகர்வை விமர்சித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மேட்டூர் அணையில் இருந்து காலம் தாழ்த்தி நீர் திறக்கப்பட்டது, பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்படாதது மற்றும் கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசி உயர்வு குறித்து தமிழக அரசை மிகக் காட்டாக வெளுத்து வாங்கியுள்ளார்
சென்னை, செப்.03: தமிழக அரசியலில் நிலவும் நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முன்னாள் எல்.எல்.ஏ இசக்கி சுப்பையாவின் திடீர் ராஜினாமா மற்றும் அதனைத் திரும்பப் பெற முயலும் போக்கு குறித்து கருத்து தெரிவித்த அவர், அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டு தற்போது பின்வாங்குவது தவறான முன்னுதாரணம் எனச் சாடினார். அத்துடன் நிற்காமல், மேட்டூர் அணையில் நீர் திறப்பு, பாசனக் கால்வாய்களைத் தூர்வாராத அலட்சியம், உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு மற்றும் நெசவுத் தொழில் பாதிப்பு என மக்கள் சார்ந்த பல்வேறு பிரச்னைகளில் தமிழக அரசின் கவனக்குறைவைச் சுட்டிக்காட்டி மிக விரிவாகப் பேட்டியளித்துள்ளார்.
மேலும் படிக்க: முதலமைச்சர் விஜய் பெயரில் ஏ.ஐ DeepFake வீடியோ.. வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி சைபர் கிரைம்..
இசக்கி சுப்பையாவின் ராஜினாமா விவகாரம்:
முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவின் திடீர் கடிதம் மற்றும் ராஜினாமா வாபஸ் பெற முயலும் நகர்வுகள் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரேமலதா, வழக்கு முடியும் வரை எம்.எல்.ஏ-வாக நீடிக்க சட்டத்தில் இடம் இருக்கும்போது, யார் அவரை அவசரப்பட்டு ராஜினாமா செய்யச் சொன்னது என்று கேள்வி எழுப்பினார். “யாருக்கும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டிய அவர், யோசித்து நிதானமாக முடிவெடுக்காமல் அவசரப்பட்டு ராஜினாமா செய்துவிட்டு, தற்போது அதைத் திரும்பக் கேட்க முயல்வது மிக மிகத் தவறான முன்னுதாரணம் என்றும், இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கண்டித்தார்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்:
செப்டம்பர் 1-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதை வரவேற்பதாகத் தெரிவித்த பிரேமலதா, இது மிகவும் காலம் தாழ்ந்த ஒரு நிகழ்வு என்று சுட்டிக்காட்டினார். அணை திறக்கப்பட்டாலும், தண்ணீர் போகும் வழியெல்லாம் தாமரைச் செடிகளும் முட்புதர்களும் மண்டிக்கிடப்பதால், கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் சென்று சேர 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும் என்று கவலை தெரிவித்தார். முன்னதாகவே நீர்நிலைகளையும் கால்வாய்களையும் அரசு தூர்வாராததே இதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டிய அவர், பயிர்கள் விளைந்து கதிரறுக்கும் காலம் வரை அணை நீர் தாராளமாகக் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும், அனைத்துப் பக்கமும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு அரசு அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு:
தமிழக அரசு தனி விமானங்களில் செல்வது, போட்டோஷூட் நடத்துவது மற்றும் தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்வதில் காட்டும் கவனத்தை மக்கள் நலனில் காட்ட வேண்டும் எனப் பிரேமலதா விமர்சித்தார். அரிசி, பருப்பு, சர்க்கரை, பெட்ரோல், டீசல் என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பட்ஜெட் போட முடியாமல் விழிபிதுங்கி நிற்பதாகக் கூறினார். ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கிலோ ₹400 முதல் ₹500 வரை உயர்ந்திருப்பதை உதாரணமாக்கிய அவர், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் மற்றும் சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசு டோல்கேட் கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி-யைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க: 1 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய இரும்பு கம்பி.. அரசு மருத்துவர்கள் செய்த நுட்பமான ஆபரேசன்.. ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!
நெசவுத் தொழில் பாதிப்பும் லஞ்ச ஊழல் ஒழிப்பும்:
நெசவுத் தொழிலைப் பொறுத்தவரை ஜி.எஸ்.டி மற்றும் பருத்தி விலை உயர்வு ஆகியவற்றால் அத்தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் பெரும் வாழ்வாதாரப் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. வெறும் விளம்பர அரசியலையும் கவர்ச்சித் திட்டங்களையும் பார்த்து மக்கள் சலிப்படைந்து விட்டதாகத் தெரிவித்த பிரேமலதா, லஞ்ச ஊழலை ஒழித்து, விலைவாசியைக் கட்டுப்படுத்தி, சாமானிய மக்களுக்கு உண்மையான நல்லாட்சியை வழங்குவதே தற்போதைய அவசரத் தேவை என்று கூறினார்.