பொளக்கும் வெயில்.. பாளையங்கோட்டையில் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்த வெப்பம்.. வரும் நாட்களில் எப்படி இருக்கும்?
Weather Update: செப்டம்பர் 3-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 3, 2026: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. தொடர்ந்து திருச்சியில் 40.1, ஈரோட்டில் 39.8, மதுரையில் 39.5, வேலூரில் 39.2, தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 37.2 டிகிரி செல்சியசும், நுங்கம்பாக்கத்தில் 37 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டையில் இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை – எச்சரிக்கும் வானிலை:
வரும் நாட்களிலும் தமிழகத்தில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனவும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: முதலமைச்சர் விஜய் பெயரில் ஏ.ஐ DeepFake வீடியோ.. வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி சைபர் கிரைம்..
செப். 8 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு:
இதனிடையே, செப்டம்பர் 3-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது.. சூரியன் தான் நிரந்தரம் – மு.க ஸ்டாலின்
செப்டம்பர் 4 முதல் 8-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு:
மழைக்கான வாய்ப்பு ஒருபுறம் இருந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.