மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது.. சூரியன் தான் நிரந்தரம் – மு.க ஸ்டாலின்
கொள்கையற்ற, கட்டமைப்பற்ற கட்சிகள் வரும், போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம். நிலைத்து நிற்கும் கட்டமைப்பை பலப்படுத்தி, கொள்கைப் பயணத்தைத் தொடர்வோம். இன்று நாம் செய்யும் பணிகள் நாளை வரலாறாக நிலைத்து நிற்கும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2, 2026: கொள்கையற்ற, கட்டமைப்பற்ற கட்சிகள் வரும், போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்” என திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக நிர்வாகிகளுடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து கட்சியின் சார்பில் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாற்றம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும் – மு.க ஸ்டாலின்:
இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியைப் பிடித்த மாநிலக் கட்சி என்ற பெருமையும், பல்வேறு சாதனைகளைப் படைத்த கட்சி என்ற பெருமையும் திமுகவுக்கு உள்ளது. அதற்குக் காரணம், ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடாமல் காலத்திற்கு ஏற்றவாறு நம்மை நாம் ‘அப்டேட்’ செய்து கொள்வதுதான். மாற்றங்கள் நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.
திமுக 2.0-வுக்கான பயணத்தை தற்போது தொடங்கியுள்ளோம். நடந்து முடிந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்து, நாம் இழந்த பாதைக்கு மீண்டும் திரும்ப வேண்டும். இதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.
முதலில் கள ஆய்வுக் குழுவை அனுப்பி நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டோம். பின்னர் ஆன்லைன் வாயிலாக தொண்டர்களிடமும் கருத்துகளைப் பெற்றோம். அந்த அறிக்கைகளை முழுமையாகப் படித்தேன். அதில் கிடைத்த கருத்துகளின் அடிப்படையில், கட்சிக் கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகளைப் பரிந்துரைக்க கட்சி மறுசீரமைப்புக் குழுவை அமைத்தோம். அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினோம்.
திமுகவில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்க:
அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 28-ம் தேதி 110 மாவட்டங்களை அறிவித்தோம். இந்தச் செயல்பாட்டின் அடுத்தகட்டப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள, தலைமைக்கழக பிரதிநிதிகளாக அனைவரையும் நியமித்துள்ளோம்.
கழக மறுசீரமைப்புக்கான தலைமைக்கழக பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ள நீங்கள், என்னுடைய கண்களாகவும் காதுகளாகவும் இருந்து மாவட்டங்களுக்குச் சென்று, எந்தவித பாகுபாடும் பார்க்காமல், எந்தவித அழுத்தத்திற்கும் அடிபணியாமல் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியைச் சரியாக செய்து முடிக்க வேண்டும்.
முக்கியமாக, நீங்கள் செல்லும் இடங்களில் முதலில் சொல்ல வேண்டியது, கிளை முதல் தலைமைக்கழகம் வரையிலான பொறுப்புகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது என்பதுதான். இந்தத் தேர்தல் அனைத்தும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும். அப்போதுதான் புதிய நிர்வாகிகளும், இளைஞர்களும் கட்சிப் பொறுப்புகளுக்கு வர முடியும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
ஒரு சிலருக்கு பதவி பறிக்கப்படும்:
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், வயது வரம்பு மற்றும் ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்பதற்கான வரம்பு உள்ளிட்ட காரணங்களால் பலரின் தற்போதைய பொறுப்புகள் மாற்றப்படலாம். யாரையும் தலைவர் கைவிடப் போவதில்லை. அவர்களின் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகள் வழங்கும் வகையில் தலைவர் முடிவெடுப்பார் என்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
மேலும் படிக்க: முதலமைச்சர் விஜய் பெயரில் ஏ.ஐ DeepFake வீடியோ.. வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி சைபர் கிரைம்..
வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின்படி கழக அமைப்புகள் உருவாக்கப்படுவதை உறுதி செய்து, அனைவரின் ஒத்துழைப்பையும் பெற்று, தலைமைக்கழகத்தில் ஒப்படைக்க வேண்டிய பணிகளை அடுத்த 15 நாட்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும்.
வேர்கள் வலிமையாக இருந்தால்தான் ஆலமரம் உறுதியாக நிற்கும். அதேபோல், நம்முடைய கழகக் கட்டமைப்புதான் நம்மைத் தாங்கி நிற்கிறது. அந்த ஆணிவேரைப் பலப்படுத்தும் பெரும் பொறுப்பு உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்:
மறுசீரமைப்புக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் தலைமைக்கழகத்தின் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், தங்கம் தென்னரசுவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
கொள்கையற்ற, கட்டமைப்பற்ற கட்சிகள் வரும், போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம். நிலைத்து நிற்கும் கட்டமைப்பை பலப்படுத்தி, கொள்கைப் பயணத்தைத் தொடர்வோம். இன்று நாம் செய்யும் பணிகள் நாளை வரலாறாக நிலைத்து நிற்கும். கழகத்தை மறுசீரமைப்போம்; நீண்டு வருவோம்; மீண்டும் வெல்வோம்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.