விளாத்திக்குளம் மாணவி பாலியல் கொலை வழக்கு.. கைதானவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிப்பு!
Vilathikulam Student Murder Case Verdict: விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி பாலியல் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவருக்கான தண்டனை விவரங்களை நீதிமன்றம் விரைவில் அறிவிக்க உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிளஸ் டூ மாணவி. இவர், கடந்த மே 10- ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றிருந்தார். ஆனால், வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாதால் அவரது பெற்றோர் அந்த பகுதியில் தேட தொடங்கினர். சிறிது நேர தேடலுக்கு பிறகு அந்தப் பகுதியில் மாணவி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, மாணவியின் பெற்றோர் விளாத்திக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள காற்றாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.
குற்றவாளி என தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
இதில், ரௌடியான தர்ம முனீஸ்வரன் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரித்ததில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பின்னர் இன்று திங்கள் கிழமை ( மே 25) தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: சர்ச்சையான அந்த சிரிப்பு.. பின்னணி இதுதான்.. ஓப்பனாக பேசிய அமைச்சர் கீர்த்தனா!




வழக்கு தொடர்பாக 73 பேரிடம் விசாரணை
இதில், குற்றம் சாட்டப்பட்ட ரெளடி தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்று 2- ஆம் கூடுதல் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதன் மூலம் பிளஸ் 2 மாணவி பாலியல் கொலை வழக்கில் தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக சுமார் 73 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சம்பவ இடத்தின் அருகே இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
குற்றவாளிக்கான தண்டனை விவரம்
தர்ம முனீஸ்வரன் மற்றும் கொலை செய்யப்பட்ட மாணவி உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த இரு மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்து தீப்பளித்துள்ளது. இவருக்கான தண்டனை விவரம் பிற்பகல் அறிவிக்கப்பட உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க: திருச்செங்கோட்டில் டிஜிட்டல் யுகம்.. பொதுமக்கள் குறைகளை தீர்க்க வருகிறது புதிய ஆப்.. அருண்ராஜ் அளித்த நற்செய்தி!