AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“பிரச்னை முடியல.. நீயா நானா பார்த்துருவோம்” அன்புமணிக்கு சவால் விட்ட ராமதாஸ்!

Anbumani vs Ramadoss : பாட்டாளி மக்கள் கட்சியில் பிரச்னை முடியவில்லை என்று டிராவில் உள்ளதாகவும் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், என்னை குலசாமி எனக் கூறிக் கொண்டு என் நெஞ்சில் குத்துகிறார்கள் எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதன் மூலம், தந்தை மகனுக்கு இடையிலான பிரச்னை இன்னும் நீடித்து வருவது தெரிகிறது.

“பிரச்னை முடியல.. நீயா நானா பார்த்துருவோம்” அன்புமணிக்கு சவால் விட்ட ராமதாஸ்!
ராமதாஸ் - அன்புமணிImage Source: x
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Jun 2025 14:13 PM IST

சென்னை, ஜூன் 11 : பாட்டாளி மக்கள் கட்சியில் (PMK Internal Issues) பிரச்னை முடியவில்லை என்று டிராவில் உள்ளதாகவும் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் (Ramodoss) தெரிவித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், “எனக்கும் செயல் தலைவருக்குமான பிரச்னை முடியவில்லை. பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துவிட்டது. முடிவு எதுவும் வரவில்லை. பாமக பிரச்னையில் சிறந்த ஆளுமைகள் 2 பேரின் சமரச பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த விஷயத்தில் நீயா நானா பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்துவிட்டேன்.  அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க நான் என்ன முட்டாளா? என்னை குலசாமி எனக் கூறிக் கொண்டு என் நெஞ்சில் குத்துகிறார்கள். எல்லாமே ஐயா தான் என சொல்லிக் கொண்டு என்னை அதளபாதாளத்தில் தள்ளிவிட நினைக்கிறார்கள். ராமதாஸ் கேட்டை சாத்திவிட்டு பேரன் பேத்திகளோடு விளையாடட்டும் என்று கூறியுள்ளார்.

அன்புமணிக்கு சவால் விட்ட ராமதாஸ்

கேட்டை சாத்திக் கொண்டு என்னால் வீட்டிற்குள் இருக்க முடியாது. தொடர்ந்து செயல்படுவேன். 43 ஆண்டுகள் போராடி உருவாக்கிய கட்சியில் ஓரிரு ஆண்டுகள் தலைமையேற்க எனக்கு உரிமையில்லையா? எனக்கு உரிமையில்லையா எனக் கேட்பதே எனக்கு அவமானம்.

உயிருள்ள என்னை எல்லா வகையிலும் உதாசீனப்படுத்தி என் உருவப்படத்தை மட்டும் உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபிணமாக்கி நாடு முழுவதும் என் பெயரில் நடை பயணம் மேற்கொள்கின்றனர்.  குருவை மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால், தந்தையை மிஞ்சிய தனயன் கூடாது.

தந்தைக்கு பிறகே தனயன். அய்யாவிற்கு பிறகே அன்புமணி. என் கை விரல் கொண்டே என் கண்ணை நான் குத்திக் கொண்டேன். 2026 சட்டப்பேரவை தேர்தல் வரை நானே பாமக தலைவராக தொடருவன். தேர்தலுக்கு பிறகு அனைத்து பதவிகளும் அன்புமணிக்கு செல்லும். பாமகவில் நிறுவனர் நானே. தலைவர் நானே. அன்புமணியின் பதவிக்காலம் முடிந்து விட்டது. கூட்டணி குறித்து நான் தான் முடிவு செய்வேன்.

”அரசியலில் வாரிசு என்பதை கிடையாது”

அன்புமணியை ஒருபோதும் கட்சியில் இருந்து நீக்க மாட்டேன். என் குடும்பத்தில் உள்ள பெண்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்றேன். என் எதிர்ப்பை மீறி தருமபுரியில் போட்டியிட்டார் சவுமியா அன்புமணி. அரசியலில் வாரிசு என்பதை கிடையாது” என கூறியுள்ளார். இதன் மூலம், தந்தை மகனுக்கு இடையிலான பிரச்னை இன்னும் நீடித்து வருவது தெரிகிறது.

கடந்த சில மாதங்களாகவே அன்புமணிக்கும், ராமதாஸுக்கும் அதிகார போட்டி நிலவுகிறது. சமீபத்தில் கூட, பாமகவின் கட்சியின் தலைவராக தானே செயல்பட உள்ளதாக ராமதாஸ் அறிவித்தது பெரும் பிரச்னையாக வெடித்தது.  அன்றில் இருந்தே கட்சியில்  பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியது.  சமீபத்தில் கூட, தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு சென்ற அன்புமணி இருவருக்கும் இடையிலான பிரச்னை குறித்து பேசினர். இருப்பினும், பாமக பிரச்னை முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us