தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சம்மதம்…பாமக-தேமுதிக எடுத்த முடிவு?
PMK And DMDK To Continue In NDA: தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் யார் யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. அதன்படி, பாமக, தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு தொடர்பான முடிவு வெளியே கசிந்துள்ளது .
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகையை சூடி விட வேண்டும் என்பதற்காக ஆளும் திமுக, எதிர்க் கட்சியான அதிமுக, மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளிட்டவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதில், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அந்தக் கூட்டணியில் அப்படியே தொடர்வதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தங்களது கருத்துக்களை தற்போது வரை தெரிவிக்காமல் உள்ளது. இதில், குறிப்பாக பாமக மற்றும் தேமுதிக ஆகியவை தங்களது கருத்துக்களை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால், அதிமுக கூட்டணியில் இந்த இரு கட்சிகளும் தொடருமா அல்லது வேறு கூட்டணியை நோக்கி நகருமா என்ற கேள்வி பரவலாக எழுந்தது.
அதிமுக கூட்டணியா- திமுக கூட்டணியா?
ஏனென்றால், பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு உச்சக் கட்டத்தை எட்டி இருந்தது. இதனால், ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைய இருப்பதாகவும். அன்புமணி தரப்பு அதிமுக பாஜக கூட்டணியில் இணைய இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாகவே தந்தை மகன் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
அதிமுக – தேமுதிக இடையே விரிசல்
இதே போல, அதிமுகவிடம், தேமுதிக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தங்களது கட்சிக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், அந்த கோரிக்கையை ஏற்காத எடப்பாடி கே. பழனிசாமி 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் தனது கட்சியை சேர்ந்த நபர்களுக்கே ஒதுக்கி இருந்தார். இதன் காரணமாக அதிமுக – தேமுதிக இடையே சிறிது விரிசல் ஏற்பட்டது.




திமுகவிடம் நெருங்கி சென்ற தேமுதிக
இதனடையே, அதிமுக மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில், திமுகவிடம், தேமுதிக சற்று நெருங்கி சென்றது. இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக ஐக்கியம் ஆகும் என்று பேசப்பட்டன. ஆனால், தேமுதிக இதற்கு பிடி கொடுக்காமல், அனைத்து கட்சிகளும் தேமுதிகவுக்கு தோழமை கட்சிகள் தான் என்று தெரிவித்து வருகிறது.
தேஜ கூட்டணியில் தொடர்வதாக முடிவு?
இந்த நிலையில், அதில் ஒரு முக்கிய திருப்பம் வந்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது என்னவெனில், பாட்டாளி மக்கள் கட்சியும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் தற்போது அங்கம் வகித்து வரும் அதிமுக – பாஜக கூட்டணியில் தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கூட்டணி குறித்து அறிவிக்கும் போது…
இருந்தாலும், பாட்டாளி மக்கள் கட்சியும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் இதனை தற்போது வரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், தங்களது கூட்டணி குறித்து அறிவிக்கப்பட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாகவே அறிவிக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.