அரசியலில் கம்முனு இருக்க கூடாது… மக்கள் எப்படி ஆட்சியைத் தருவாங்க… – விஜய்யை விமர்சித்த அண்ணாமலை
TVK Vijay : விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அரசியலில் கம்முனு இருக்கக் கூடாது. திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதுச்சேரி, டிசம்பர் 16: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை (Annamalai) புதுச்சேரியில் டிசம்பர் 16, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,-அரசியலில் கம்முனு இருக்கக் கூடாது. திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விஜய் (Vijay) கருத்து தெரிவிக்காதது ஏன்? பேசவேண்டிய இடத்தில் பேசுங்கள் விஜய். நாட்டில் எவ்வளவு பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கின்றன . எவ்வளவு சண்டைகள் நடக்கிறது. ஆனால், நான் வேடிக்கை மட்டும் பார்ப்பேன் என்றால் உங்களை நம்பி எப்படி மக்கள் ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
விஜய் மீது அண்ணாமலை விமர்சனம்
தப்பு என்றால் தப்பு என்று சொல்லங்கள் சரி என்றால் சரி என சொல்லுங்கள். புதுச்சேரியில் ஒரு எம்எல்ஏவை அவர் சிறுபான்மையினர் என்பதால் பொறுப்பு அளிக்கவில்லை என விஜய் பேசினார். ஆனால் திருப்பரங்குன்ற விவகாரத்தில் பெரும்பான்மையினருக்காக ஏன் அவர் பேசவில்லை. மக்கள் விஜய்யை கவனித்தபடி இருக்கின்றனர். அவர்களுக்கு உண்மை என்ன என்று தெரியும். களத்தில் சந்திப்போம். நியாயமான விஷயங்களில் ஒன்றாக இருப்போம் என்பது தான் விஜய் அவர்களுக்கு நான் சொல்லும் கருத்து என்றார்.
இதையும் படிக்க : போலி மருந்து விவகாரம்…முதல்வர் பதவி விலக வேண்டும்…வே.நாராயணசாமி போர்க்கொடி!
முன்னதாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 7 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், சுவர் இடிந்து விழுந்து, 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தங்கள் குழந்தையை இழந்து தவிக்கும் சிறுவனது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், அரசுப் பள்ளிக் கட்டடங்கள், மேற்கூரைகள், சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுவது தொடர்கதை ஆகியிருக்கிறது.
பள்ளி மாணவர் மரணம் குறித்து அண்ணாமலை கண்டனம்
இதையும் படிக்க : ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி…முன்னேற்பாடுகள் தீவிரம்!
ஒவ்வொரு முறையும், அரசுப் பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையைப் பரிசோதித்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்தி வந்திருக்கிறோம். பல பள்ளிகள், கட்டடம் இல்லாமல் மரத்தடியில் இயங்கி வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆனால், முதல்வரோ, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரோ, இதனைக் குறித்து எந்தக் அக்கறையும் காட்டவில்லை.
ஏழை, எளிய குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளை, திமுக அரசு ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததன் விளைவு, இன்று வாழ வேண்டிய ஒரு குழந்தையைப் பறி கொடுத்திருக்கிறோம். இதனை விபத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. திமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலையாகவே கருத முடியும். என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.



