2026 சட்டமன்ற தேர்தல்…தவெக-பாஜகவுக்கு…வைகோ மறைமுக எச்சரிக்கை!
Tvk And BJP Vaiko Issues Veiled Warning: 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாரதீய ஜனதா கட்சிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மது விலக்குக்கு ஆதரவாக 1, 700 கிலோ மீட்டர் நான் நடந்திருந்தாலும், முழுமையான மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சிரமங்களினால், சிறிது சிறிதாகவே மதுக் கடைகளை அகற்ற முடிகிறது. எங்கள் கிராமத்தில் நாங்கள் போராட்டம் மேற்கொண்டு மது கடைகள் சூறையாடப்பட்டு உயர் நீதிமன்றத்தில் அதிமுக அரசு முறையீடு செய்து அதில் எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. மதுக் கடைகளை திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலும் முறையீடு செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றமும் அந்த மனுவை நிராகரித்து இருந்தது. கலிங்கப்பட்டி ஊராட்சி போன்ற தீர்மானம் தான் செல்லுமென்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மதிமுக சார்பில் சமத்துவ நடைபயணம்
தற்போது, கஞ்சா மற்றும் மதுவை எதிர்த்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும், எச்சரிக்கையும் செய்யும் விதத்திலும், தமிழகத்தில் சாதி, மத மோதல்களுக்கு இடம் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சமத்துவ நடை பயணம் மேற்கொள்ள உள்ளேன். இந்த நடை பயணத்தில், என்னுடன் 950 பேர் பங்கேற்கின்றனர். இவர்களை, நானே நேர்காணல் செய்த தேர்ந்தெடுத்துள்ளேன்.
மேலும் படிக்க: ரூ. 39.20 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்..




திருச்சியில் இருந்து தொடங்கும் நடைபயணம்
இதில், பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் நடை பயணத்தில் பங்கேற்கின்றனர். இந்த நடைபயணமானது திருச்சி, மலைக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் இருந்து தொடங்குகிறது. இந்த நடைபயணத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நடைபயணம் மதுரையில் நிறைவடைகிறது. இந்த நடைபயணம் கட்டுப்பாடாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் நடத்தப்பட உள்ளது.
திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்
இந்த நடை பயணத்தின் போது, ஒரு கருத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழகத்தில் நடைபெற இருக்கிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தான் மகத்தான வெற்றியை பெரும். திமுக கூட்டணி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். திருவண்ணாமலையில் திமுகவின் இளைஞர் அணி மாநாடு பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்துள்ளது. புதிதாக அரசியலுக்கு வந்தவர்களாக இருந்தாலும் சரி, ஏற்கனவே அரசியலில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி திமுகவை அசைத்து பார்க்க முடியாது.
எஸ்ஐஆர் பணியால் ஜனநாயகத்துக்கு கேடு
தேர்தல் நெருங்கும் போது தான், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும். எஸ். ஐ. ஆர். பணி என்பது ஜனநாயகத்துக்கு கேடு. தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டு, புதிதாக 65 லட்சம் வாக்காளர்களை இணைப்பது மற்றொரு கேடாகும். இதன் மூலம் பாஜகவால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அதிமுகவின் ஒரே எதிரி திமுக…திமுக…திமுக…ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!