ரூ. 39.20 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்..
Tamil Nadu Haj Ilam: ரூபாய் 39 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில், நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 400 ஹஜ் புனிதப் பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டிடம் கட்டுவதற்காக, டிசம்பர் 16ஆம் தேதி காலை 10 மணி அளவில் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
சென்னை, டிசம்பர் 16, 2025: சென்னை விமான நிலையம் அருகே ஹஜ் இல்லம் அமைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டிசம்பர் 16, 2025 தேதி ஆன இன்று அடிக்கல் நாட்டுகிறார். ரூபாய் 39.20 கோடி செலவில், 400 பேர் வரை தங்கும் வகையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. புனித ஹஜ் பயணம் செல்லும் பயணிகள் ஒரு நாள் முன்பாகவே சென்னைக்கு வந்து தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் வகையில் இந்த ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய மக்களுக்கு உதவும் வகையில் இந்த தமிழ்நாடு ஹஜ் இல்லம் செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் அருகே அமைக்கப்படும் ஹஜ் இல்லம்:
இந்த சூழலில், சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகே இன்று இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் வாழும் அனைவரையும் போலவே சிறுபான்மையின மக்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து வருகிறார். இஸ்லாமிய சமுதாய மக்கள் ஹஜ் பயணத்தை தங்களின் வாழ்நாள் கடமைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் சென்னை வரும் இஸ்லாமியர்கள், பயணம் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பாகவே சென்னை வந்து தங்கி, சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள வசதியாக, விமான நிலையத்திற்கு அருகில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என 02.03.2025 அன்று அறிவித்திருந்தார்.
ஹஜ் இல்லத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்:
அந்த அறிவிப்பின்படி, சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகே நங்கநல்லூரில், ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில், ரூபாய் 39 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில், நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 400 ஹஜ் புனிதப் பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டிடம் கட்டுவதற்காக, டிசம்பர் 16ஆம் தேதி காலை 10 மணி அளவில் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் மத்திய அரசு – முதல்வர் ஸ்டாலின் காட்டம்
ஹஜ் பயணம்:
ஹஜ் பயணம் இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படை கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உடல் மற்றும் பொருளாதார ரீதியாக தகுதி உள்ளவர்கள் வாழ்நாளில் ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது மத நம்பிக்கை. தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் சென்னை விமான நிலையம் வழியாக சவுதி அரேபியா செல்கிறார்கள். ஹஜ் பயணிகள் குழுக்களாக பயணம் செய்ய வசதியாக இந்த ஹஜ் இல்லம் ஒரு மையமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.