Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சட்டசபை தேர்தல்.. பிப்.6ம் தேதி முதல் தவெக சார்பில் விருப்பமனு விநியோகம்

2026 Assembly election: வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், வரும் வரும் பிப்ரவரி 6 வெள்ளிக்கிழமை முதல் வரும் 14ம் தேதி சனிக்கிழமை வரை வழங்கப்படுகின்றன.

சட்டசபை தேர்தல்.. பிப்.6ம் தேதி முதல் தவெக சார்பில் விருப்பமனு விநியோகம்
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 03 Feb 2026 13:36 PM IST

சென்னை, பிப்ரவரி 03: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு பிப்.6 முதல் விருப்ப மனு வழங்கப்படும் என தவெக அறிவித்துள்ளது. தொடர்ந்து, பிப்.14ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. இதையொட்டி, பிரதான கட்சிகளாக விளங்கும் திமுக, அதிமுக ஆகியவை கூட்டணி தொடர்பான விஷயங்களில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்தமுறை தேர்தலில் புதுவராவாக விஜய்யின் தவெகவும் இடம்பெற்றுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை கூட்டணியை இறுதி செய்துவிட்டது. இன்னும், தொகுதி பங்கீடு செய்வதும், மேலும் சில கட்சிகள் இடம்பெறுவது குறித்து சிந்திப்பது மட்டுமே தற்போதைய பணியாக உள்ளது.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்… நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய மதுரை கலெக்டர் – என்ன நடந்தது?

தாமதம் காட்டும் திமுக:

குறிப்பாக, அதிமுகவை பொறுத்தவரை வேட்பாளர்கள் தேர்விற்கு விருப்ப மனு விநியோகம் நிறைவு செய்யப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வேட்பாளர் நேர்காணல் நடந்து வருகிறது. அதேசமயம், கள நிலவரம் குறித்து ஆராய்வது, தேர்தல் வாக்குறுதி பெற குழு அமைத்து அதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால், திமுக தரப்பில் இருந்து விருப்ப மனு விநியோகம் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. அதேபோல், இதற்கான பேச்சுவார்த்தையை தொடங்குவதில் கூட இழுபறி நிலவி வருகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தான், காங்கிரஸ் இம்முறை கூட்டணியில் நீடிக்குமா என்பது தெரியவரும். ஏனெனில், இரு தரப்பு நிர்வாகிகளுக்கும் கடும் மோதல் போக்கு நிலவியுள்ளது.

இந்நிலையில், கூட்டணி குறித்து பொருட்படுத்தாத தவெக, அடுத்தடுத்த பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. ஏற்கெனவே, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த அக்கட்சி பிரச்சார பணிகளையும் தீவிரப்படுத்த ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் விருப்பமனு விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஆட்சி அதிகாரம் கைக்கு வேண்டும்:

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

தவெக விருப்பமனு விநியோகம்:

அந்த வகையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், வரும் வரும் பிப்ரவரி 6 வெள்ளிக்கிழமை முதல் வரும் 14ம் தேதி சனிக்கிழமை வரை கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன.

இதையும் படிக்க : தவெக தேர்தல் பிரசார சட்ட பாதுகாப்பு குழு…34 பேர் கொண்ட டீமை இறக்கிய விஜய்!

பிப்ரவரி 6ஆம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.