அதிமுகவின் ஒரே எதிரி திமுக…திமுக…திமுக…ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Only Enemy Of AIADMK Is DMK: அதிமுகவுக்கு ஒரே எதிரி திமுக தான் என்று அந்தக் கட்சியின் சட்டப் பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி. உதய குமார் தெரிவித்தார். மேலும், அதிமுக- பாஜக கூட்டணி குறித்தும் பேசினார்.
இது தொடர்பாக அதிமுகவின் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள், மற்ற கட்சியை சேர்ந்தவர்களை பாராட்டுவதும், விமர்சிப்பதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது என்பதை காண்பிக்கிறது. அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி கூட்டணியாக இருப்பதை கண்டு ஆளும் திமுக அரசு நடு நடுங்கி போய் உள்ளது. 175 தொகுதிகளில் மக்களை நேரடியாக சென்று சந்தித்த எடப்பாடி பழனிசாமியின் சாதனையை எந்த கட்சித் தலைவரும் முறியடிக்க முடியாது. திமுகவை எதிர்க் கக்கூடிய கட்சிகள், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக இருக்கும் கட்சிகள் அதிமுகவில் இணைவதை அந்த கட்சியினரும், பொதுமக்களும் ஏற்றுக் கொள்வார்கள்.
அதிமுகவின் ஒரே எதிரி திமுக…திமுக… திமுக
பாஜக அதிமுக தொகுதி பங்கீடு குறித்து அந்தந்த கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். இது தொடர்பான விவரங்களை முன்கூட்டியே தெரிவிக்க முடியாது. அதிமுகவின் ஒரே எதிரி திமுக… திமுக… திமுக… திமுகவின் மக்கள் விரோத ஆட்சி, திமுக வின் குடும்ப ஆதிக்கம், திமுகவின் வாரிசு அரசியல் இதையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வருகிறது. இதற்கு, 2026 சட்டமன்ற தேர்தலில் விடிவுகாலம் கிடைக்கும். இதனை எத்தனை ஸ்டாலின், எத்தனை உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் தடுக்க முடியாது.
மேலும் படிக்க: ரூ. 39.20 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்..




செயற்குழு, பொதுக்குழு தீர்மானங்களின் படி அதிமுக செயல்படும்
செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அடிப்படையில் தான் அதிமுக செயல்படும். அதிமுக என்ற ஒரு இயக்கத்தில் மட்டுமே சாதாரண தொண்டன் கூட நாடாள முடியும் என்பதற்கு எடப்பாடி பழனிசாமியை எடுத்துக்காட்டு. தேர்தல் நேரத்தில் எதிர்க் கட்சிகள் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்துக்கும் பூதக்கண்ணாடி மூலம் எதிர் கருத்துக்களை ஆராய்ந்து தெரிவிக்க முடியாது.
செங்கோட்டையன் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு
அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் வரும் என்பதை நான் ஜாதகம் பார்த்து கூற முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை முதல்வர் ஆக்குவது தான் எனது முதல் குறிக்கோள் என்று செங்கோட்டையன் கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, நான் அந்த செய்தியை பார்க்கவில்லை. அதை பார்த்துவிட்டு பதில் அளிக்கிறேன் என்று ஆர். பி. உதயகுமார் தெரிவித்தார்.
அதிமுக -பாஜக கூட்டணியின் வெற்றி உறுதி
ஜனநாயக நாட்டில் தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சிகளும் போட்டியிடும். எனவே, நீங்கள் போட்டியிடக் கூடாது என்று எந்த கட்சியையும் நாம் கூற முடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும். மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணியும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியும் தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஆர்டர்லி முறையை திரும்பப்பெற தமிழக பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவு..