Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. திடீர் டெல்லி பயணம்.. பின்னணி என்ன?

Annamalai Delhi Visit: இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் ஓ.பன்னீர்செல்வத்தை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து பேசினார். மேலும், டிசம்பர் 8, 2025 அன்று கோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் ஒரு மணி நேரத்திற்குமேல் ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. திடீர் டெல்லி பயணம்.. பின்னணி என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Dec 2025 09:04 AM IST

டெல்லி, டிசம்பர் 9, 2025: பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த சூழலில் அரசியல் களம் பரபரப்பாக மாறி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை முன்னிட்டு தங்களது பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. தமிழக அரசியலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. ஏறத்தாழ பல கட்சிகள் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் நெருங்கும் காலத்தில் கூட்டணிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பாஜக கூட்டணி:

2026 சட்டமன்றத் தேர்தலை பாஜக மற்றும் அதிமுக இணைந்து சந்திக்க உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தன. அதன் மூலம் பாஜக 15 ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு இடங்களை பெற்று மீண்டும் சட்டமன்றத்தில் நுழைந்தது . ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்றைய பாஜக தலைவர் அண்ணாமலை இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

மேலும் படிக்க: கடலூரில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் யானை.. பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு!

பின்னர் 2025 ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தந்தபோது, பாஜக மீண்டும் கூட்டணியில் சேரும் என அதிமுக தரப்பு தெரிவித்தது. அதன் பின்னர் இரு கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் மற்றும் டிடிவி:

ஆனால் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் காரணமாக பாஜக–அதிமுக கூட்டணி பலவீனமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு திடீரென வெளியேறியது. அதேபோல் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

டிடிவி தினகரன் கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணம் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தான் என அவர் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை விலகிச் சென்ற இந்த இருவரையும் அடிக்கடி சந்தித்து வருகிறார்.

மேலும் படிக்க: அழுத பச்சிளம் குழந்தைக்கு பால் கொடுத்த போது நேர்ந்த சோகம்.. உயிரிழந்ததற்கு இதுதான் காரணமா?

டெல்லி புறப்பட்டு சென்ற அண்ணாமலை:

அதன் பகுதியாக, இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் ஓ.பன்னீர்செல்வத்தை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து பேசினார். மேலும், டிசம்பர் 8, 2025 அன்று கோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் ஒரு மணி நேரத்திற்குமேல் ஆலோசனை நடத்தினார்.

பிரிந்து சென்ற இரு தரப்பினரையும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்கான முயற்சிகளை அண்ணாமலையும் மேற்கொண்டு வருகிறார். இதனைப் பற்றி பாஜக தேசிய தலைமையிடம் தெரிவிக்கவும் ஆலோசனை பெறவும் அவர் கோவையிலிருந்து திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

எனவே, அண்ணாமலையின் திடீர் டெல்லி பயணம் முக்கியமான அரசியல் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.