புதுச்சேரியில் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்…தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!
Chief Electoral Officer Explanation: புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மூலம் சுமார் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கால் அவகாசமும் அளிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, புதுவை மாநிலத்தில் காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் 1.03,467 பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எஸ். ஐ. ஆர். பணிகளுக்கு முன்பு மொத்தம் 10.21 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்தனர். எஸ். ஐ. ஆர். பணிகளுக்கு பின்பு 9, 18,11 பேர் உள்ளனர். அதன்படி, 1,03,467 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் புதுச்சேரி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 600 வாக்காளர்களும், காரைக்காலில் 5000 வாக்காளர்கள் இறந்தவர்களாக உள்ளனர்.
இறப்பு சான்றிதழின் அடிப்படையில்…
இவர்களின் இறப்பு சான்றிதழை நகராட்சி நிர்வாகத்தில் இருந்து பெற்று அதன் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் புதுச்சேரியில் இருந்து வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு மாறி சென்றிருப்பவர்களாகவும், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் வாக்குரிமை பெற்றவரகளாகவும் உள்ளனர். எனவே, இதில் பெயர் விடுபட்டிருந்தாலும், படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்படாமல் இருந்தாலும் 2026 ஜனவரி 15- ஆம் தேதி வரை படிவத்தை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரூ. 39.20 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்..
3 வகையான படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்
இது தொடர்பாக புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் படிவம் 6, படிவம் 7, படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இதற்கான கால அவகாசம் இன்று டிசம்பர் 16- ஆம் தேதி முதல் 2026 ஜனவரி 15- ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் முன்பு இருந்ததை விட தற்போது 10% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சில வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அளிப்பு
இதில், இறந்தவர்கள் 20,798 பேரும், வேறு இடங்களுக்கு மாறி சென்றவர்கள் 80,645 பேரும், 2 இடங்களில் உள்ள வாக்காளர்கள் 2,024 பேரும் என நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், கண்டுபிடிக்க முடியாத நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். அதன் அடிப்படையில் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படுவார்கள். புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை (எஸ் ஐ ஆர்) மேற்கொள்வதற்கு அரசியல் ஒத்துழைப்பு அதிகமாக இருந்தது என்று தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: தமிழக காவல் துறையில் நீடிக்கும் ஆர்டர்லி முறை.. உடனடியாக திரும்பப்பெற தமிழக பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவு..



