டெல்லியில் அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை.. அதிமுகவிடம் 54 தொகுதிகள் கேட்க முடிவு!!
BJP decides to demand 54 constituencies: பாஜக 54 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு அதிக வாக்குகள் கிடைத்த தொகுதிகளை பட்டியலிட்டு, சென்னையில் மட்டும் 8 தொகுதிகளை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
டெல்லி, டிசம்பர் 15: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று இரவு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர் விருப்ப மனு, நேர்காணல் என அடுத்தடுத்த பணிகளில் தமிழகமே அரசியல் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்தசூழ்நிலையில், தமிழகத்தில் முதல் ஆளாக கடந்த ஏப்ரல் மாதமே, பாஜக, அதிமுக உடனான தனது கூட்டணியை உறுதிபடுத்தியது. இதைத்தொடர்ந்து, இந்த தேர்தலில் கடந்த முறையை விட, அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில், தமிழக பாஜக கட்சி தீவிர களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க : புதிய கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்?.. அதிமுக உரிமை மீட்பு குழுவை, கழகமாக மாற்றியதால் பரபரப்பு!!
அதிமுகவிடம் 54 தொகுதிகளை கேட்க முடிவு:
அந்தவகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில அரசியலில் தனது தனித்த அடையாளத்தை உருவாக்கும் வகையில் மேலிடத்திலும் தனது கருத்துகளை வலியுறுத்தி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜக 54 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இதில் சென்னையில் மட்டும் 8 தொகுதிகளை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
நயினார் நாகேந்திரன் டெல்லி விசிட்:
இந்த சூழ்நிலையில், பாஜக கேட்க வேண்டிய தொகுதிகள் குறித்து, நயினார் நாகேந்திரன் ரகசிய ஆலோசனை நடத்தி முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த விவரங்களை பாஜக மேலிடத்திடம் எடுத்துரைப்பதற்காகவே அவர் டெல்லி சென்றதாகவும் கூறப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். காலையில் நடைபெற்ற இவ்விழாவைத் தொடர்ந்து, பல ரகிசய சந்திப்புகளையும் அவர் மேற்கொண்டார்.
1 மணி நேரமாக அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை:
இந்நிலையில், நேற்று இரவு சுமார் 9 மணியளவில், டெல்லி கிருஷ்ணமேனன் சாலையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்துக்கு சென்ற அவர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்து பேசினார். அப்போது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அதோடு, ‘தமிழகம் தலைநிமிர’ என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் நயினார் நாகேந்திரன் தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அழைப்பும் விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு விஜய்க்கு அனுமதி.. மாவட்ட எஸ்பி உத்தரவு!
மரியாதை நிமித்த சந்திப்பு:
பின்னர், இரவு 10.20 மணியளவில் அவர் அங்கிருந்து வெளியே வந்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய உள்துறை அமைச்சருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே. கூட்டணி குறித்தோ அல்லது தொகுதி பங்கீடு குறித்தோ எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” என்றார். தொடர்ந்து, திங்கட்கிழமை காலை பாஜக தேசிய செயல் தலைவரை தலைமை அலுவலகத்தில் சந்தித்துவிட்டு சென்னை திரும்புவேன் என்று தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் களம் சூடிபிடித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு, தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.