தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு விஜய்க்கு அனுமதி.. மாவட்ட எஸ்பி உத்தரவு!
SP Gave Permission To Vijay To Meet Public | ஈரோட்டில் டிசம்பர் 18, 2025 அன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு மாவட்ட எஸ்பி அனுமதி வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை, டிசம்பர் 14 : ஈரோட்டில் (Erode) டிசம்பர் 18, 2025 அன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தமிழக வெற்றிக் கழக (TVK – Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய்க்கு மாவட்ட எஸ்பி அனுமதி வழங்கியுள்ளார். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியில் புதியதாக இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி கோரியிருந்த நிலையில், தற்போது நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய தவெக
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தவெகவில் புதியதாக இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், காவல்துறையிடம் அனுமதிகோரி கடிதம் வழங்கியிருந்தார்.
இதையும் படிங்க : ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து.. 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்
அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் இல்லை என்றும், விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விஜய் நிகழ்ச்சி நடத்த எந்த வித தடையும் இல்லை என்றும் அவர் கூறி இருந்தார்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ள மாவட்ட எஸ்பி
ஈரோட்டில் டிசம்பர் 18, 2025 அன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கு தற்போது மாவட்ட எஸ்பி சுஜாதா அனுமதி வழங்கியுள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்த ரூ.50,000 வாடகை என்றும், அதேபோல் ரூ.50,000 டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க : நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. பாமகவில் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக அனுமதி கோரியிருந்தது. ஆனால், அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துவிட்டது. இதற்கு பிறகு புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.