ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து.. 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்!!
பேருந்தில் வெளிநாட்டைச் சேர்ந்த பயணிகளும் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக நெல்லை - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் ஒரு சில மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டதுடன், கவிழ்ந்து கிடந்த பேருந்தை அகற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
நாகர்கோவில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், குமரி மாவட்டம் தோவாளை அருகே தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பேருந்து சாலையில் கவிழ்ந்ததால், அதில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். சமீப காலமாக தமிழகத்தில் பேருந்து விபத்துக்குள்ளாகும் சம்பவமானது அதிகரித்த வண்ணம் உள்ளது. அண்மையில் கூட தென்காசியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்தது. இதில், 7 பேர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து 2 இடங்களில் அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானது. இவ்வாறு நடக்கும் தொடர் சாலை விபத்துகளால் பயணிகள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க : தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…அரசியல் பின்னணி என்ன!
சென்டர் மீடியன் மீது மோதிய பேருந்து:
நெல்லையிலிருந்து இன்று காலை நாகர்கோவில் நோக்கி சென்ற இந்த ஆம்னி பேருந்து, தோவாளை அருகே விசுவாசபுரம் பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் அமைந்துள்ள சென்டர் மீடியன் மீது மோதியது. இந்த வேகத்தில் தாறுமாறாக இழுத்துச்செல்லப்பட்ட பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், பேருந்துக்குள் இருந்த ஈடிபடுகளில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, விபத்து நடந்ததும், அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கவிழ்ந்து கிடந்த பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு:
அதோடு, இந்த விபத்து காரணமாக நெல்லை – நாகர்கோவில் நெடுஞ்சாலையில் ஒரு சில மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆரல்வாய்மொழி போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டதுடன், கவிழ்ந்து கிடந்த பேருந்தை அகற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
இந்த பேருந்தில் வெளிநாட்டைச் சேர்ந்த பயணிகளும் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சென்டர் மீடியன் காரணமாக அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன என்றும், அதை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.