தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…அரசியல் பின்னணி என்ன!
Amit Shah Is coming To Tamil Nadu: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் டிசம்பர் 15- ஆம் தேதி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வருகையின் போது, வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சி, மாநில பாஜக நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், தமிழக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தனர். இதே போல, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரும் டிசம்பர் 14- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் டிசம்பர் 15- ஆம் தேதி (திங்கள்கிழமை) தமிழகம் வர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை
இதில், தமிழக பாஜக மாநில நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து வேலூர் செல்லும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதற்கான வியூகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வகுத்து வருகிறார்.
மேலும் படிக்க: டெல்டாக்காரன் என சொல்லும் முதல்வர் விவசாயிகளுக்கு விரோதியாக செயல்படுகிறார் – நயினார் நாகேந்திரன்..
தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான அடிப்படை பணிகளிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அதிமுக உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது.
தே.ஜ.கூட்டணியை வலுப்படுத்துவதற்காக…
அதன் அடிப்படையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதற்காக அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் எனவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கூட்டணியில் மீண்டும் இணைக்க வேண்டும் எனவும் அமித்ஷா விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமித் ஷாவின் தமிழக வருகையின் போது, தனது சொந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
அமமுகவை கூட்டணியில் இணைப்பது தொடர்பாக…
இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக வலியுறுத்துவார் என்று தெரிகிறது. மேலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது தொடர்பான பணிகளையும் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: தவெகவின் சின்னம் இதுதான்?.. ஈரோடு பொதுக்கூட்டத்தில் அறிவிக்கிறார் விஜய்?



