தவெகவின் சின்னம் இதுதான்?.. ஈரோடு பொதுக்கூட்டத்தில் அறிவிக்கிறார் விஜய்?
Vijay's TVK symbol: புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை முடித்துள்ள விஜய், அடுத்து ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். செங்கோட்டையன் தலைமையில் இதற்காக ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தவெகவின் சின்னம் குறித்த அறிவிப்பை விஜய் ஈரோட்டில் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
சென்னை, டிசம்பர் 12: தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னத்தை அதன் தலைவர் விஜய் தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் தவெக, தேர்தல் சின்னம் பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தன. தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள், வாக்கு சதவீதம், சட்டசபை உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும். இப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அந்தந்த கட்சிகள் விரும்பும் சின்னமே நிரந்தரமாக வழங்கப்படும். அவ்வாறு அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தங்களுக்கான பொதுச் சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம். அந்த வகையில், தவெகவும் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தது.
மேலும் படிக்க: தொகுதி பங்கீடா? எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!
‘விசில்’ சின்னம் கேட்ட தவெக:
இதற்காக, விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை, மைக்ரோஃபோன் உள்ளிட்ட 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டு அதில் ஒன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது. இதில், தவெகவின் விருப்பத்தேர்வு சின்னங்களின் பட்டியலில் முதலிடத்தில் விசில் சின்னம் இருந்துள்ளது. ஏனென்றால், அது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் மனதில் எளிதாக பதியும். தேர்தல் பிரச்சாரம் பரப்புரை போன்ற நிகழ்வுகளுக்கும் விசில் சின்னம் ஏற்றதாக இருக்கும் என தவெகவினர் கூறி வந்தனர். தொடர்ந்து, தவெக விசில் சின்னத்தை விரும்பினாலும், அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் எந்த சின்னம் வழங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.




தவெகவுக்கு “மோதிரம்” சின்னம்?
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், தவெகவுக்கு “மோதிரம்” சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. முதலில் தவெக சார்பில் ஆட்டோ சின்னம் கோரப்பட்டிருந்தது. ஆனால், அதில் ஆட்டோ சின்னம் தற்போது கேரளாவில் உள்ள ஓர் அரசியல் கட்சிக்கு வழங்கப்பட்டதால், அதை பெறும் வாய்ப்பு குறைந்துவிட்டது. இதனால் மாற்று சின்னங்கள் வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் அறிவிப்பு?
அதன் பின்னரே, விசில், கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை, மோதிரம் உள்ளிட்ட சின்னங்கள் தவெக தரப்பில் கேட்டகப்பட்ட நிலையில், மோதிரம் சின்னம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்த சின்னத்தை இனி வரும் தேர்தல் பிரச்சாரங்களில் பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக, சின்னம் குறித்த அறிவிப்பை அடுத்து நடக்கும் பொதுக்கூட்டத்தில் விஜய் அறிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: 2026-ல் கைக்கோர்க்கும் பாமக – தவெக? போராட்டத்தில் கலந்துக்கொள்ள நேரில் அழைப்பு..
அந்தவகையில், புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை முடித்துள்ள விஜய், அடுத்து ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். செங்கோட்டையன் தலைமையில் இதற்காக ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தவெகவின் சின்னம் குறித்த அறிவிப்பை விஜய் வெளியிட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெகவின் சின்னத்தை பார்த்து நாடே வியக்கும்:
முன்னதாக பேசிய அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மக்கள் சக்தியாக உருவெடுத்து வரும் விஜய், 2026-ல் தமிழக முதல்வராக அமர்வது உறுதி என்றும், தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியை உருவாக்க விஜய் புறப்பட்டிருக்கிறார் எனவும் கூறியிருந்தார். அதோடு, தவெகவுக்கு விரைவில் சின்னம் கிடைக்கப் போகிறது. அந்த சின்னத்தைப் பார்த்து நாடே வியக்கப் போகிறது என்று கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.