“சட்டத்தை மதிக்காத ஆட்சியை தொடரவிடக்கூடாது”.. நயினார் நாகேந்திரன் சூளுரை!!
Thiruparankundram issue: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 93 பேர் மீது சட்டவிரோதமாக அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை, டிசம்பர் 05: தமிழ்நாட்டில் சட்டத்தை மதிக்காத ஆட்சி நடந்துகொண்டிருப்பதாகவும், இந்த நிலையை நிச்சயம் தொடர விடக் கூடாது என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சூளுரைத்துள்ளார். மேலும், நீதிமன்ற தீர்ப்பைக் மதிக்காமல் செயல்படும் அரசை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் நேற்று 2வது முறையாக உத்தரவிட்டும், போலீஸார் அனுமதி வழங்க மறுத்தனர். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதால், யாரையும் மலை உச்சிக்கு அனுமதிக்க முடியாது என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால், அங்கு திரண்டிருந்த பாஜக, இந்த அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோவில் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க: 2வது முறையும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு.. திருப்பரங்குன்றத்தில் நீடிக்கும் பதற்றம்!
93 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு:
தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் இரவு 11 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 93 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்படி சட்டவிரோதமாக அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தை மதிக்காத ஆட்சி:
பாசிச திமுக அரசின் பாச்சா பாஜகவினரிடம் பலிக்காது!
திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்து வழிபாட்டு முறைகளையும், தமிழர் பண்பாட்டையும் அழிக்கத் துடிக்கும் இந்துவிரோத @arivalayam அரசுக்கு எதிராகவும் மாண்பமை உயர்நீதிமன்றங்களின் உத்தரவுகளை நிறைவேற்றக் கோரியும்… pic.twitter.com/mxAg3xDydB
— Nainar Nagenthran (@NainarBJP) December 4, 2025
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கூட மதிக்காமல் செயல்படும் இந்த அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்நாட்டில் சட்டத்தை மதிக்காத ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையை நிச்சயம் தொடர விடக் கூடாது. இதற்கு விரைவிலேயே ஒரு முடிவு கட்டப்படும் என்றும் சூளுரைத்துள்ளார்.
நடுநிசியிலும் தொடரும் போராட்டம்:
மேலும், பாசிச திமுக அரசின் பாச்சா பாஜகவினரிடம் பலிக்காது என்று கூறிய அவர், திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்து வழிபாட்டு முறைகளையும், தமிழர் பண்பாட்டையும் அழிக்கத் துடிக்கும் இந்துவிரோத அரிவாலய அரசுக்கு எதிராகவும் மாண்பமை உயர்நீதிமன்றங்களின் உத்தரவுகளை நிறைவேற்றக் கோரியும் தமிழகம் முழுவதும் அமைதி வழியில் போராடி வரும் தமிழக பாஜகவின் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் நினைத்து அளவில்லா கர்வம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அதோடு, கடந்த நான்கரை ஆண்டுகளாக நியாயத்திற்காக மக்களுடன் துணை நிற்கும் பாஜகவினர் மீது ஆளும் அரசு ஆயிரம் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டாலும், பாஜக தொண்டர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் கடுகளவு கூட குறையவில்லை என்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு தான் நடுநிசியிலும் நடக்கும் இப்போராட்டங்கள் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் விவகாரம்… அரசின் மனுவில் மறைமுக நோக்கம்…. நிராகரித்த நீதிமன்றம்
அசைத்துக்கூட பார்க்க முடியாது:
தொடர்ந்து, பயந்தவர்கள் தான் பாசிசத்தின் பாதங்களில் சரணாகதி அடைவார்களே தவிர, மக்கள் பணியை மகேசன் ஆணையாக ஏற்று உழைக்கும் பாஜகவின் படைத்தளபதிகள் ஆளும் அரசின் பொய் வழக்குகளையும் போலி கைதுகளையும் பதக்கங்களாகத் தாங்கி நிற்பவர்கள். பாசிச திமுக அரசால் பாஜக தொண்டர்களின் மனஉறுதியை அசைத்துக் கூட பார்க்க முடியாது என்றும் கூறியுள்ளார்.



