AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரே நாடு, ஒரே தேர்தல்.. நோயை விட கொடிய மருந்து – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..

உலக நாடுகளில் கட்டாயமாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறை இல்லை. கனடாவில் கூட்டாட்சி மற்றும் மாகாணத் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்படுகின்றன.ஆஸ்திரேலியாவில் மாநில சட்டமன்றங்களின் காலம் 4 ஆண்டுகள்; கூட்டாட்சிச் சபையின் காலம் அதிகபட்சம் 3 ஆண்டுகள். ஜெர்மனியில் அரசியல் நிலைத்தன்மை ஒருங்கிணைந்த தேர்தல்களால் அல்ல, “Constructive Vote of No Confidence” போன்ற அரசியல் நடைமுறைகளால் உருவாகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல்.. நோயை விட கொடிய மருந்து – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Mar 2026 15:47 PM IST

சென்னை, மார்ச் 9, 2026: “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நோயை குணப்படுத்த அதைவிடக் கொடுமையான மருந்தை தருவதற்கு சமம். நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையையே தலைகீழாக மாற்றும் தேர்தலை நடத்துவதில் இருக்கும் நிர்வாக சிக்கல்களுக்காக ஜனநாயகத்தை முடக்க நினைப்பது தவறு” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில், 2019ஆம் ஆண்டு இந்தோனேஷியா ஜனாதிபதி, தேசிய மற்றும் பிராந்திய சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்தியது. செலவுகளை குறைத்து நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி பெரிய மனிதாபிமான இழப்பை ஏற்படுத்தியது.

சுமார் 900 தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5,000க்கும் மேற்பட்டோர் கடுமையான உடல்நலக் குறைவு அடைந்தனர். இதையடுத்து 2025 ஜூன் மாதத்தில் இந்தோனேஷிய அரசியலமைப்பு நீதிமன்றம், 2029 முதல் தேசிய மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’:

இந்தியாவில் முன்வைக்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ (ONOE) திட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுவதாவது:

  • தேர்தல் செலவுகளை குறைக்க முடியும்

  • பாதுகாப்புப் படையினரின் நீண்டகால பணியமர்த்தலைத் தவிர்க்கலாம்

  • தேர்தல் நன்னடத்தை விதிகளால் ஏற்படும் நிர்வாகத் தடைகள் குறையும்

  • அரசியல் கட்சிகள் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டிய நிலை குறையும்

ஆனால் இந்தோனேஷியாவின் அனுபவம் ஒரு முக்கியமான எச்சரிக்கை பாடமாக உள்ளது.

உலக நாடுகளில் தேர்தல் நடைமுறை:

உலக நாடுகளில் கட்டாயமாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறை இல்லை. கனடாவில் கூட்டாட்சி மற்றும் மாகாணத் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்படுகின்றன.ஆஸ்திரேலியாவில் மாநில சட்டமன்றங்களின் காலம் 4 ஆண்டுகள்; கூட்டாட்சிச் சபையின் காலம் அதிகபட்சம் 3 ஆண்டுகள். ஜெர்மனியில் அரசியல் நிலைத்தன்மை ஒருங்கிணைந்த தேர்தல்களால் அல்ல, “Constructive Vote of No Confidence” போன்ற அரசியல் நடைமுறைகளால் உருவாகிறது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையை பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தியாவில் First-Past-The-Post முறை நடைமுறையில் உள்ளது. இதனால் தேசிய அளவில் எழும் அரசியல் அலை, மாநிலத் தேர்தல்களையும் முழுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

அரசியலமைப்பு திருத்த மசோதா:

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான வரைமுறையை முன்வைத்துள்ளது. இதன் அடிப்படையில் அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா, 2024 கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாவில்: லோக்சபா தேர்தல் சுழற்சியுடன் மாநில சட்டமன்றங்களின் காலத்தை ஒத்திசைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம், சட்டமன்றங்கள் முன்கூட்டியே கலைக்கப்பட்டால் மீதமுள்ள காலத்திற்கான தேர்தல், தேவையெனில் மாநில தேர்தல்களை ஒத்திவைக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் போன்ற மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

கூட்டாட்சி அமைப்புக்கு ஏற்படும் பாதிப்பு:

S.R. Bommai vs Union of India (1994) வழக்கில் உச்ச நீதிமன்றம் கூட்டாட்சி அமைப்பு அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதி என்று தீர்மானித்தது. மாநிலங்கள் வெறும் நிர்வாக அலகுகள் அல்ல; அவை தனித்துவமான அரசியலமைப்பு அடையாளத்தைக் கொண்டவை. ஆனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் மாநிலங்களின் அரசியல் சுழற்சிகளை பாதிக்கும் அபாயம் உள்ளது.

இந்த மசோதாவின் மிகவும் கவலைக்கிடமான அம்சம் மீதமுள்ள பதவிக்கால தேர்தல். இதனால், குறுகிய கால ஆட்சிகள் உருவாகலாம், வாக்காளர்களின் ஆர்வம் குறையலாம், நிர்வாக முடிவுகள் பாதிக்கப்படலாம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், இந்த திட்டத்தின் காரணமாக மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்படலாம், மத்திய அளவில் இடைக்கால அரசு நீடிக்கக்கூடும், இது அரசியலமைப்பின் பல பிரிவுகளுடன் முரண்படக்கூடும்.

உண்மையான காரணம் என்ன?

தேர்தல் செலவை காரணமாகக் கூறுவது பொருத்தமற்றது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலைக் குழு மதிப்பீட்டின்படி லோக்சபா மற்றும் மாநில தேர்தல்களின் செலவு சுமார் ₹4,500 கோடி, இது மத்திய பட்ஜெட்டின் 0.25% மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அமைத்த நீதிபதி குரியன் ஜோசப் குழு, தனது அறிக்கையில் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தின் நன்மைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் அதன் கட்டமைப்பு பாதிப்புகள் மிகவும் ஆழமானவை என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் கூட்டாட்சியை பாதிக்கும். அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பை மாற்றும். மேலும், ஜனநாயக பொறுப்புணர்வை குறைக்கும் என அவர் கூறியுள்ளார். “இந்தோனேஷியா செய்த தவறை இந்தியா மீண்டும் செய்யக்கூடாது” என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us