தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமெடுக்கும் என வானிலை மையம் முன்னறிவித்திருந்தது. அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, டிசம்பர் 04: தமிழ்நாட்டில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என மஞ்சள் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வரும் வாரத்தில் பருவமழை தீவிரமெடுக்கும் என வானிலை மையம் ஏற்கெனவே, முன்னறிவித்திருந்தது. அதேசமயம், வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்துள்ளது. தொடர்ந்து, இன்று அது மேலும் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருவதால், மக்கள் அவதியடைந்துள்ளனர்.
இதையும் படிக்க : தொடர் மழையால் ஸ்தம்பித்த சென்னை.. பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..
வட தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழை:
தித்வா புயல் காரணமாக சென்னை உள்பட வட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, புதுச்சேரி அருகே நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து, இன்றைய தினம் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட சென்னை மற்றும் திருவள்ளூரில் தான் அதிகளவில் மழை கொட்டித்தீர்த்தது. இவ்வாறு, கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது.




பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால், எந்தவொரு அசம்பாவித சம்பவமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த மாவட்டங்களில் நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.
13 மாவட்டங்களில் கனமழை:
இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என மஞ்சள் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, நீலகிரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.
இதையும் படிக்க : வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தொடரும் கனமழை.. தத்தளிக்கும் சென்னை!
நாளை 3 மாவட்டங்களில் கனமழை:
தொடர்ந்து, நாளை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் முன்னறிவித்துள்ளது. அதன்படி, நாளை தமிழகத்தில் வேறு எங்கும் கனமழை எச்சரிக்கை அளிக்கப்படவில்லை. இதனால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.