2வது முறையும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு.. திருப்பரங்குன்றத்தில் நீடிக்கும் பதற்றம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றத்தில் 2வது முறையாக தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், அதனை போலீசார் அமல்படுத்த அனுமதி அளிக்கவில்லை. அதோடு, தமிழக அரசு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறி, அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், அங்கிருந்த பாஜகவினர், இந்து அமைப்பினர் அதனை ஏற்காததால் பரபரப்பு நிலவுகிறது.
மதுரை, டிசம்பர் 05: திருப்பரங்குன்றம் (Thiruparankundram) மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் நேற்று 2வது முறையாக உத்தரவிட்டும், போலீஸார் அனுமதி வழங்க மறுத்தனர். இதன் காரணமாக கோவில் முன்பு திரண்ட இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பதற்றம் நிலவியது. தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதால், யாரையும் மலை உச்சிக்கு அனுமதிக்க முடியாது என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால், கோவில் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதால் அங்கு மேலும் பரபரப்பு நீடிக்கிறது.
மேலும் படிக்க: சென்னையில் இன்று மட்டும் தான் மழை இருக்கும்.. நாளை முதல் மழைக்கு ப்ரேக் – வெதர்மேன் பிரதீப் ஜான்..
தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் முதல் உத்தரவு:
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று மதுரையை சேர்ந்த எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட 4 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அப்போது, நீதிமன்ற தீர்ப்பை ஏற்க போலீசார் மறுத்தனர். இதனால், சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் மனுதாரர் 10 பேர் சென்று தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். அதற்குள் மாவட்ட நிர்வாகம் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனை சுட்டிக்காட்டி சிஐஎஸ்எஃப் போலீசார் திருப்ப அனுப்பப்பட்டனர்.
2வது முறையாக தீபம் ஏற்ற உத்தரவு:
தொடர்ந்து, நேற்றைய தினம் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனால், 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவில் எந்த வித மீறலும் இல்லை என்று கூறியது. இதைத்தொடர்ந்து, தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்த ஜ.ஆர்.சுவாமிநாதன், 144 தடை உத்தரவை ரத்து செய்தும், தீபத் தூணில் நேற்றைய தினமே (வியாழக்கிழமை) உடனடியாக தீபம் ஏற்றுமாறும் உத்தரவிட்டார்.
மேல்முறையீடு செல்ல உள்ளதால் அனுமதி மறுப்பு:
இந்த உத்தரவைத் தொடர்ந்து, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் எச்.ராஜா, ராம.ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு திரண்டனர். ஆனால், 144 அமலில் இருப்பதை சுட்டி காட்டிய போலீசார், கோயில் முன்பு கூடி நிற்பவர்கள் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். அதோடு, 144 தடை உத்தரவை நீதிபதி ரத்து செய்ததை எதிர்த்தும், மனுதாரர் உட்பட 10 பேர் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதால், யாரையும் மலை உச்சிக்கு அனுமதிக்க முடியாது என போலீசார் திட்டவட்டமாக மறுத்தனர்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் விவகாரம்… அரசின் மனுவில் மறைமுக நோக்கம்…. நிராகரித்த நீதிமன்றம்
பாஜக, இந்து அமைப்பினர் கைது:
அப்படியென்றால், மனுதாரரை மட்டுமாவது தீபம் ஏற்ற அனுமதிக்குமாறு நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், போலீஸார் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை கண்டித்து நயினார் நாகேந்திரன், எச்.ராஜா தலைமையில் பாஜகவினர், இந்து அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கோவில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச்சென்றனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.



