AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்.. உழைக்க நான் தயார்.. நீங்கள் தயாரா? முதல்வர் ஸ்டாலின்..

எண்ணிக்க முடியாத அளவுக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதனால் தான் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறோம். விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம். மற்ற கட்சிகள் தவணைகளில் அறிக்கையை வெளியிடுகின்றன. திமுக திட்டங்களை யாராலும் நிறுத்த முடியாது. முத்துவேல் கருணாநிதி திட்டம் யாராலும் மாற்ற முடியாத திட்டமாகும். 

200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்.. உழைக்க நான் தயார்.. நீங்கள் தயாரா? முதல்வர் ஸ்டாலின்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Mar 2026 21:15 PM IST

திருச்சி, மார்ச் 9, 2026: திருச்சி அருகே சிறுகனூரில் திமுகவின் 12வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து இந்த திருச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழர்களை காக்க தகுதியும் திறமையும் கொண்ட ஒரே படை திமுக தான்” என்று குறிப்பிட்டார்.

திரும்பும் இடமெல்லாம் கருப்பு சிவப்பு நிறம்:

அவர் தொடர்ந்து பேசுகையில்: திருச்சி மாநாட்டு இடம் முழுவதும் திரும்பும் திசையெல்லாம் கருப்பு, சிவப்பு நிறங்கள் தெரிகின்றன. மாநாடு நடைபெறும் இந்த திருச்சி சிறுகனூர் அல்ல, பெறுகனூர் போல காட்சி அளிக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக நாம் நடத்துவது மாநாடுகள்தான். இதில் லட்சக்கணக்கான தொண்டர்களை அழைத்து தேர்தல் பணியை தொடங்கி வைத்துள்ளோம். ஆனால் இன்று அவற்றின் உச்சமாக, அனைத்தையும் மிஞ்சும் அளவிற்கு இந்த மாநில மாநாடு திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இங்கு திமுக தொண்டர்கள் அளித்த வரவேற்பு என் வயதை குறைத்துவிட்டது. என் பிறந்தநாளில் தலைவர்கள் வாழ்த்து கூறும்போது எனக்கு வயது அதிகமாகவில்லை என்று சொன்னார்கள். ஆன்மீக அன்பர்கள் “என்ன தவம் செய்தோமோ” என்று சொல்வார்கள். அதுபோல, நான் வயது ஆனது தெரியாமல் இருப்பதற்கு காரணம் நீங்கள்தான். நான் வளரவும், முதலமைச்சராக ஆகவும் நீங்கள் தான் காரணம்.

நேருவை பாராட்டிய முதல்வர்:

கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெல்வது போலத்தான் இந்த மாநாடு அமைந்துள்ளது. இந்த மாநாட்டை அமைச்சர் கே.என். நேரு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார். மாநாடு என்றால் நேரு, நேரு என்றால் மாநாடு என்பதே உண்மை.

200 ஏக்கர் நிலத்தில் இந்த மாநாடு நடத்தப்பட்டு உள்ளது. அதுபோல் தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று அமைச்சர் நேரு கூறியுள்ளார். தேர்தலில் தனிப்பட்ட ஸ்டாலினுக்கான முழக்கம் இல்லை. “திமுக தொடரட்டும்” என்பதுதான் எங்கள் முழக்கம்.

எப்போதும் திமுக வெல்லும்:

இன்று நடைபெறும் இந்த 12வது மாநில மாநாட்டில், இதுவரை 7 முறை திருச்சியில் மாநாடு நடந்துள்ளது. பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஒரே சிறையில் இருந்தது திருச்சியில் தான். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் மற்றும் கல்லக்குடி போராட்டத்தில் கலைஞர் கருணாநிதி சிறையில் அடைக்கப்பட்டதும் திருச்சியில்தான். திருச்சி என்றால் திருப்பம், திருச்சி என்றால் எழுச்சி, திருச்சி என்றால் வெற்றி.

தமிழ்நாட்டை திமுக தொடர்ந்து ஆள வேண்டும் என்ற உறுதிமொழியை நாம் எடுக்க வேண்டும். 7வது முறை மட்டுமல்ல, எப்போதும் திமுக தான் வெல்லும்.

நமக்கென்று வரலாறு உள்ளது. தமிழை காப்பாற்றியது திமுக தான். தமிழ்நாட்டுக்கு பெயர் வைத்தது திமுக தான். தமிழை காப்பாற்றுவது நாம்தான். திமுக ஆட்சி தொய்வு இல்லாமல் தொடர வேண்டும்.

பல நெருகடிகளை தாண்டி முன்னேறியுள்ளோம்:

1971 தேர்தலில் பெரியார் கூறியது – “திமுக வென்றால் தமிழ் சமூகம் வாழும்” என்பதுதான். 2021 சட்டமன்றத் தேர்தலில் நான் 7 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தேன். அந்த ஏழும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு இருந்தாலும், தமிழ்நாடு பல துறைகளில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு முன்னேறியுள்ளோம்.

2014–2021 வரை அதிமுக ஆட்சியில் 471 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. திமுக ஆட்சியில் 1,190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு 4 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்தது. திமுக ஆட்சியில் 12 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. இது மூன்று மடங்கு அதிகம். அதிமுக ஆட்சியில் 4 சிப்காட் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டன. திமுக ஆட்சியில் 33 சிப்காட் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன.

200 தொகுதியில் நிச்சயம் வெற்றி:

மேலும் 13,500 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் 57.25 லட்சம் ஏக்கர் சாகுபடி நிலம் இருந்ததை, திமுக ஆட்சியில் 62.5 லட்சம் ஏக்கராக உயர்த்தி அறுவடை செய்துள்ளோம்.

அதிமுக ஆட்சியில் விளையாட்டு துறையில் 3 பேருக்கு மட்டும் வேலை வாய்ப்பு கிடைத்தது. திமுக ஆட்சியில் 320 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எண்ணிக்க முடியாத அளவுக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதனால் தான் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறோம். விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம். மற்ற கட்சிகள் தவணைகளில் அறிக்கையை வெளியிடுகின்றன. திமுக திட்டங்களை யாராலும் நிறுத்த முடியாது. முத்துவேல் கருணாநிதி திட்டம் யாராலும் மாற்ற முடியாத திட்டமாகும்.

அதிமுக கூட்டணி என்றால் மோடி, அமித்ஷா கோபித்து கொள்வார்கள். அது NDA கூட்டணி. தங்களுக்கே கூட்டணி பெயரைச் சொல்ல முடியாத நிலை. கல்வி நிதி, 100 நாள் வேலைவாய்ப்பு நிதி போன்றவற்றை மத்திய அரசு வழங்கவில்லை. கோவை, மதுரை, திருச்சிக்கு மெட்ரோ திட்டத்துக்கும் அனுமதி தரவில்லை.

“டபுள் என்ஜின்” அரசுக்கு தமிழ்நாடு “No” என்று சொல்லும்:

ஆளுநர் மூலம் தொந்தரவு, அமலாக்கத்துறை மூலம் மிரட்டல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டை திட்டமிட்டு புறக்கணிக்கும் NDA கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். உங்கள் “டபுள் என்ஜின்” அரசுக்கு தமிழ்நாடு “No” என்று சொல்லும்.

தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்று நான் கேட்டேன். தேர்தலுக்காக மட்டும் மக்களிடம் வரும் கட்சி திமுக அல்ல. அதிமுக முகமூடி அணிந்து பாஜக வந்தால், அந்த முகமூடியை கிழிப்போம். காவி நிறத்தை தமிழ்நாட்டில் பூச விடமாட்டோம்.

பாஜக, அதிமுகவை விழுங்குகிறது. அதிமுக தொண்டர்களை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. எடப்பாடி பாஜகவிற்கு அடிமையாக உள்ளார். பீஹாரில் நிதிஷ் குமாரை பயன்படுத்தி பாஜக வெற்றி பெற்று, பின்னர் தங்களது முதல்வரை கொண்டு வர முயன்றது போல, தமிழ்நாட்டிலும் அதிமுகவை பயன்படுத்தி ஆட்சி செய்ய முயல்கிறது.

ஆனால் பாஜக திமுகவை மிரட்ட முடியாது. எப்போதும் தமிழ்நாடு out of control தான். எங்கள் மண்ணில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். திமுக – NDA இடையே போட்டி இல்லை. தமிழர்கள் – NDA இடையே தான் போட்டி.

திமுக கூட்டணி கட்சிகளுக்கும் தொண்டர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் ஆகியோரை மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தனர். அதன்பிறகு ஸ்டாலினையும் மக்கள் தேர்ந்தெடுத்தனர். திமுக ஆட்சி தான் சொன்னதைச் செய்யும், சொல்லாததையும் செய்யும். தேர்தலில் உழைக்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா? மீண்டும் வெல்வோம்… மீண்டும் மீண்டும் வெல்வோம்! என்று அவர் கூறினார்.

Follow Us