செங்கோட்டையனுக்கு டிடிவி தினகரன் திடீர் ஆதரவு…என்ன காரணம்!
Ttv Dhinakaran Press Meet: அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். அவை என்ன என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவதற்கு முன்பு அவரை யாருக்கும் பெரிதளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த 1989- ஆம் ஆண்டு எம்எல்ஏவாகவும், 2011- ஆம் ஆண்டு தான் அமைச்சராக பதவி ஏற்றார். ஆனால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 1972- ஆம் ஆண்டு அதிமுகவில் பொறுப்பில் இருந்து 1987- ஆம் ஆண்டு அவர் 25 வயதில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார்.
செல்வாக்கு மிக்கவர் செங்கோட்டையன்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் செங்கோட்டையன் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு செங்கோட்டையன் தலைமையிலான 7 எம்எல்ஏக்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அணிக்கு வந்தனர். முத்துச்சாமி தலைமையில் 4 பேர் மட்டுமே ஜானகி அணிக்கு சென்றனர். அந்த காலத்திலேயே செங்கோட்டையன் அவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்தார்.
மேலும் படிக்க: அந்த கனவை நொறுக்கி விட்டீர்கள்…. கோபியில் செங்கோட்டையனை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி




எடப்பாடியை விட செங்கோட்டையன் சீனியர்
கடந்த 1991- ஆம் ஆண்டு செங்கோட்டையன் அமைச்சராக இருந்தது முதல் அனைத்து விதத்திலும் எடப்பாடி பழனிசாமியை விட செங்கோட்டையன் சீனியர் ஆவார். கடந்த 2017- ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியவர்கள், அந்த பதவியே காப்பாற்றி தந்தவர்கள் ஆகியோரை அவர் தற்போது மதிக்காமல் செயல்பட்டு வருகிறார். மக்களை சந்தித்து பெற்ற எம்எல்ஏ பதவியை அவர்களிடம் கூறாமல் பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசி இருந்தார்.
18 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்த எடப்பாடி பழனிசாமி
அப்படி என்றால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுகவால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாம் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த 18 எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிசாமி மக்களிடம் கூறிவிட்டு தான் தகுதி நீக்கம் செய்தாரா என்பதை விளக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் எம்எல்ஏ பதவிக்கு கொண்டு வரப்பட்ட 18 பேரை எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகிய ஒரே காரணத்துக்காக அவர்களை துரோகத்தின் வெளிப்பாடாக பதவி நீக்கம் செய்தார்.
எடப்பாடிக்கு தகுந்த பாடம் கற்பிப்பார் செங்கோட்டையன்
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை நிராகரித்ததுடன், 50 ஆண்டுகால வரலாறு உடைய செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கிய காரணத்துக்காக, அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அமைதியான குணமுடைய செங்கோட்டையன் இவ்வளவு காலம் யோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றால், எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் கற்பிப்பதற்காகவே இருக்கும்.
மேலும் படிக்க: எலிக்கு தலையாக இருக்க கூடாது… தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து ஜெயக்குமார் விமர்சனம்
எடப்பாடிக்கு விரைவில் நோபல் பரிசு கிடைக்கும்
எடப்பாடி பழனிசாமிக்கு நோபல் பரிசு அளிப்பதற்கு செங்கோட்டையன் தயாராகிவிட்டார் என்பது அவருடைய நடவடிக்கையில் இருந்து தெரிகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான மரியாதையை குறிக்கும் விதமாகத்தான் செங்கோட்டையன் சட்டை பையில் ஜெயலலிதாவின் புகைப்படம் இருந்தது குறிக்கிறது என்று தெரிவித்தார்.