Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2026ல் மக்களின் ஆதரவுடன் “விஜய் ஆட்சிக்கு வருவார்”.. செங்கோட்டையன் உறுதி!!

தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையன், ஈரோட்டில் உள்ள தனது அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களுடன் விஜய் படத்தையும் இணைத்து வைத்துள்ளார். அதோடு, தனது காரிலும் அதிமுக கொடியை அகற்றிவிட்டு, தவெக கொடியை மாற்றியுள்ளார். நேற்றைய தினம் விஜய்யை சந்திக்கும்போதும், சட்டைப்பையில் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்திருந்தார்.

2026ல் மக்களின் ஆதரவுடன் “விஜய் ஆட்சிக்கு வருவார்”.. செங்கோட்டையன் உறுதி!!
செங்கோட்டையன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Nov 2025 13:11 PM IST

சென்னை, நவம்பர் 28: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், மக்களின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கும் நிலை உருவாகும் என அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  முன்னதாக, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் தனது ஆதராவாளர்களுடன் அக்கட்சியல் இணைந்தார். அவருக்கு விஜய் பூங்கொத்து கொடுத்து, கட்சி துண்டை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார். அதோடு, தவெக உறுப்பினர் அட்டையையும் வழங்கினார். அவருக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து, அவரது ஆதரவாளரான முன்னாள் அதிமுக எம்.பி சத்தியபாமாவும் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இதையும் படிக்க: 29 மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவு..

தவெகவில் செங்கோட்டையன் செயல்பாடு:

50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே கட்சியில் பயணித்த மூத்த தலைவரான செங்கோட்டையன்,  தவெகவில் இணைந்த நிலையில், அங்கு அவரது செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட தொடங்கியது. அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், கட்சியில் அடுத்தடுத்து உரிய முக்கியத்துவம் கிடைக்குமா? ஆன்ந்த், ஆதவ் அர்ஜூனா போன்றவர்கள் அவரை எளிதில் விஜய்யை அணுக அனுமதிப்பார்களா? போன்ற பல கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் முன்வைத்து வருகின்றனர். 

கட்சி வளர்ச்சியிலேயே கவனம்:

இந்நிலையில், இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறியதாவது, அதிமுகவில் இருந்து தவெகவில் இணையும் நிர்வாகிகள் பற்றிய விவரங்களை இச்சமயம் வெளியே கூறுவது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என்றார். மேலும், நான் நேற்று தான் கட்சியில் இணைந்துள்ளேன்; எனவே தற்போது எனது கவனம் முழுவதும் கட்சியின் வளர்ச்சி மற்றும் பிரசார பணிகளில்தான் இருக்கும் என்று கூறினார்.

விஜய்யை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபடுவேன்:

அதோடு, இன்று கோவைக்கு என் தனிப்பட்ட நிகழ்வுக்காக செல்கிறேன். அங்கு பங்கேற்று வந்தபின், விஜயைச் சந்தித்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அவருடைய கருத்தை கேட்டு முடிவுகளை எடுப்பேன் என்றார். என் அரசியல் பயணத்தை மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் நான் எப்படி உழைப்பேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதே உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும், தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை உருவாக்கி, விஜய் தலைமையிலான வெற்றிக்கழகத்தை ஆட்சிக்கு கொண்டு வர நான் முழுமையாக பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.

இதையும் படிக்க : “செங்கோட்டையன் பின்னால் பாஜக இல்லை”.. நயினார் நாகேந்திரன் பளீர்!

விஜய்யுடன் இணைந்து சுற்றுப்பயணம்:

மேலும் அவர் கூறும்போது, விஜயுடன் இணைந்து கோபிச்செட்டிபாளையம் பகுதியில் சுற்றுப்பயணம் மற்றும் பிரசாரத்தை மேற்கொள்ளும் விவரங்களை விரைவில் அவரைச் சந்தித்து தீர்மானிப்பேன். தற்போது மக்களின் மனநிலையில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. மக்களால் பெரிதும் நேசிக்கப்படுகிற தலைவர் விஜய், பல பகுதி பயணங்களிலும் பொது பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில், மக்களின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்கும் நிலை உருவாகும் என்று எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.