விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்.. பரபரக்கும் பனையூர்!!
செங்கோட்டையனுடன், முன்னாள் எம்.பி சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து, செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச் செயலாளர் பதவி வழங்குவது குறித்தும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்துடன் அவர் இணைந்து செயல்படுவார் என்றும் தெரிகிறது.
சென்னை, நவம்பர் 27: முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், இன்று காலை விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒருங்கிணைய வேண்டும் என குரல் எழுப்பி வந்த அவரை அக்கட்சியில் இருந்து அதிரடியாக எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இந்நிலையில், அவரது அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. செங்கோட்டையனும் தனது நீக்கத்திற்கு எதிராக நீதிமன்றத்தை அணுக உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில், யாரும் எதிர்பாராத திருப்பமாக அவர் தவெகவில் இணைந்துள்ளார். இதையொட்டி, தனது கோபிச்செட்டிபாளையம் எம்எல்ஏ பதவியை நேற்றைய தினம் ராஜினாமா செய்திருந்தார். தொடர்ந்து, திமுகவிலும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், அதனை ஏற்காத அவர் தற்போது 100க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்கள் உடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். அக்கட்சியில் அவருக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: 29 மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவு..
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்:
கடந்த 4 நாட்களாக அவர் தவெகவில் இணைய உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து செங்கோட்டையனிடம் பல்வேறு முறை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதும், அவர் எந்த பதிலையும் நேரடியாக தெரிவிக்காமல் வந்தார். அதேசமயம், தவெகவில் இணைய உள்ளதாக வெளியாகும் தகவலை அவர் மறுக்கவும் இல்லை. இதன் மூலம் அவர் தவெகவில் இணைவது உறுதியானது. அந்தவகையில், நேற்றைய தினம் தலைமைச் செயலகம் சென்ற அவர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது கோபிச்செட்டிப்பாளையம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கினார். தொடர்ந்து, சபாநாயகரும் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.




திமுகவில் இணைய அழைப்பு:
அந்தவகையில், நேற்று ராஜினாமா கடிதத்தை வழங்க தலைமைச் செயலகம் வந்த செங்கோட்டையனை திமுக அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. அவரை திமுகவில் இணையுமாறு அழைப்பு விடுத்ததாகவும், சேகர்பாபு உடன் மூத்த நிர்வாகிகள் பலரும் அவரை பிற்பகல் நேரம் எம்எல்ஏக்கள் விடுதியில் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்த செங்கோட்டையன் அவர்களது அழைப்புக்கு செவிசாய்க்கவில்லை எனத் தெரிகிறது.
பனையூரில் திரண்ட ஆதரவாளர்கள்:
தொடர்ந்து, நேற்றைய தினம் பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு நேரில் சென்ற செங்கோட்டையன், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. தன்னுடன், தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என அவர் நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை முதலே பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் செங்கோட்டையனின் ஆதராளர்கள் திரண்டனர். இதற்காக கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து தனிப்பேருந்துகள் மூலம் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் அழைத்து வரப்பட்டனர். குறிப்பாக அவரது ஆதரவாளாரன முன்னாள் அதிமுக எம்.பி சத்தியபாமாவும் தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தார். இதையொட்டி, பனையூர் பகுதியே இன்று பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிக்க: துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்.. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!
தவெகவில் இணைந்த செங்கோட்டையன்:
அந்தவகையில், இன்று காலை செங்கோட்டையன் வருவதற்கு முன்பே தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜய் அவரை வரவேற்க தயாராக இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் வரவேற்ற தவெக நிர்வாகிகள் அவர்களை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். சரியாக 10 மணிக்கு தவெக அலுவலகம் வந்த செங்கோட்டையனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியே வந்து வரவேற்பு தெரிவித்து அலுவலகத்திற்குள் அழைத்துச்சென்றார். தொடர்ந்து, விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செங்கோட்டையனுக்கு என்ன பதவி?
செங்கோட்டையனுக்கு தவெகவில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 4 மாவட்டங்களுக்கு (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி) அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, அவர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆன்ந்துடன் இணைந்து செயல்படுவார் என்றும், விஜய்யுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அளவுக்கு அவருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவுக்கு பெரும் இழப்பு:
அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் அதாவது, எம்ஜிஆர் இருந்த காலம் முதல் அக்கட்சியில் முக்கிய பதவி வகித்து வருகிறார். அதோடு, கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 9 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். இப்படி, முக்கியத்துவம் வாய்ந்த அவரை கட்சியில் இருந்து நீக்கியது அதிமுகவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.