29 மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவு..
ADMK District Secretaries Meet: இன்று காலை காணொளி காட்சி மூலம் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், பூத் கமிட்டி செயல்பாடு, தேர்தல் பணிகள் எப்படி நடைபெற்று வருகின்றன என்பதையும் ஆய்வு செய்தார்.
சென்னை, நவம்பர் 25, 2025: 82 மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது சரியாக பணியாற்றாத 29 மாவட்ட செயலாளர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்து, களப்பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையில் “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. பல கட்ட சுற்றுப்பயணங்கள் நிறைவடைந்த நிலையில், விரைவில் அடுத்த கட்ட சுற்றுப்பயணம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக உட்கட்சி விவகாரம்:
இந்தச் சூழலில் அதிமுகவின் உட்கட்சி விவகாரமும் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, எம்.ஜி.ஆர் காலம் முதல் அதிமுகவில் முக்கிய புள்ளியாக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். இப்படியிருக்க, அவர் வரவிருக்கும் நவம்பர் 27 ஆம் தேதி ‘தமிழக வெற்றிக்கழகத்தில்’ இணைய உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.
அதே சமயம், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,
“டிசம்பர் 15க்குள் முடிவு எடுக்கப்படாவிட்டால் புதிய கட்சி தொடங்குவேன்” என்று எச்சரித்திருப்பதும் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் நெருக்கடியாக உள்ளது.
மேலும் படிக்க: உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்? வானிலை ரிப்போர்ட்..
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. நவம்பர் 25, 2025 அன்று காலை 11 மணிக்கு காணொளிக் காட்சி மூலம் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்தினார். 82 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட நிலையில், சரியாக பணியாற்றாத 29 மாவட்ட செயலாளர்களிடம் அவர் தனியாக பேசினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், பூத் கமிட்டி செயல்பாடு, தேர்தல் பணிகள் எப்படி நடைபெற்று வருகின்றன என்பதையும் ஆய்வு செய்தார்.
அப்போது, “அதிமுக வாக்குகள் சிதறாமல் இருப்பதை அனைத்து வாக்குச்சாவடி முகவர்களும் உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும் படிக்க: யாருடன் கூட்டணி? டிச. 30 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் – பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டம்..
வாக்காளர் பட்டியல் தொடர்பான அறிவுறுத்தல்கள்:
- வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
- வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான உடன், இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவுகள் இவைகளின் பெயர்கள் சரியாக நீக்கப்பட்டுள்ளனவா என்பது கவனமாகச் சரிபார்க்க வேண்டும்.
- சில நிர்வாகிகள் களத்திற்கு செல்வதில்லை என்பதும் புகார் என கூறப்பட்ட நிலையில், “இன்னும் ஒன்பது நாட்களே உள்ளன; களத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட வேண்டும்” என்று எச்சரிக்கப்பட்டது.
காணொளிக் கூட்டத்தில் 29 மாவட்ட செயலாளர்களுடனே அவர் தனிப்பட்ட முறையில் பேசியதற்கான காரணம் — அவர்கள்மீது அதிகப்படியான புகார்கள் இருந்ததாலேயே. மேலும், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்:
- களப்பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்
- மக்கள் சார்ந்த பிரச்சினைகளில் ஈடுபட்டு போராட்டங்களை நடத்த வேண்டும்
- கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்
- ஜனவரிக்குள் கூட்டணி உறுதி செய்யப்படும்
- ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதியான வேட்பாளர் பரிந்துரை செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதையும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.