யாருடன் கூட்டணி? டிச. 30 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் – பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டம்..
PMK Alliance In Assembly Election: செய்தியாளர்களை சந்தித்த கட்சி நிறுவனர் ராமதாஸ், “சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் 2025 டிசம்பர் 30 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது. கூட்டணி குறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம், நவம்பர் 25, 2025: 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து வரும் டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், பாமக கட்சியின் உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்து, தந்தை–மகன் இடையிலான அதிகாரப்போட்டி வெளிப்படையாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இருவருமே கட்சிப் பணிகளை தனித்தனியாக மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் எந்தக் கூட்டத்திற்கும் அன்புமணியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்வதில்லை. அதே சமயம், அன்புமணி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் ராமதாஸின் ஆதரவாளர்கள் கலந்து கொள்வதில்லை.
மேலும் படிக்க: நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்.. சுற்றுப்பயணம் பாதியில் நிறுத்தம்!!
தனித்தனியாக செயல்படும் ராமதாஸ் – அன்புமணி:
இவ்வாறு இருவரும் தனித் தனியாக செயல்பட்டு வரும் காரணத்தால், 2026 சட்டமன்றத் தேர்தலை பாமகம் இரண்டு அணிகளாகப் பிரிந்து சந்திக்கக்கூடும் என கூறப்படுகிறது. மேலும், கட்சித் தலைவர் அன்புமணி, ராமதாஸின் ஆதரவாளர்களை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதே சமயம், கட்சி நிறுவனர் ராமதாஸும் அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியின் அனைத்து ஆலோசனைக் கூட்டங்களையும் ராமதாஸ் தைலாபுரத்திலும், அன்புமணி மகாபலிபுரத்திலும் நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: ‘டிச.15க்குள் இறுதி முடிவு’.. இபிஎஸ்-க்கு கெடு; ஓபிஎஸ் தலைமையில் உருவாகும் புதிய கட்சி?
அண்மையில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டமும், அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டமும் தனித்தனியாக நடந்தன. அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் அவரின் தலைவர் பதவிக்காலம் ஒரு வருடம் நீடிக்கப்பட்டது. ஆனால் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான மனுவை அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமதாஸ் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. பாமக கௌரவத் தலைவர் ஜி. கே. மணி, முன்னாள் தலைவர் தீரன், பொதுச்செயலாளர் முரளி சங்கர், சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்கான நடவடிக்கைகள், தேர்தலை எவ்வாறு சந்திப்பது, எந்தெந்த தொகுதிகள் சாதகமாக உள்ளன, அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பதுபோன்ற பல அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முக்கியமாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
கூட்டணி குறித்து டிசம்பர் 30 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும்:
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கட்சி நிறுவனர் ராமதாஸ், “சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் 2025 டிசம்பர் 30 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது. கூட்டணி குறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்கப்படும். அதில் கட்சி நிர்வாகிகள் அனைவருடனும் கருத்துகள் கேட்டு, அதன் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். ஜாதிவாரியான கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்துக் கொண்டு, வரவிருக்கும் டிசம்பர் 12 ஆம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.