தஞ்சாவூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்துக்கு க்ரீன் சிக்னல்… பரபரக்கும் தேர்தல் களம்… என்ன பேசப்போகிறார் விஜய்!
Thanjavur TVK Eexecutives Meeting: தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு மாவட்ட காவல் துறை அனுமதி அளித்துள்ளது. இதனால், திட்டமிட்டபடி மார்ச் 4- இல் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், விஜய் பங்கேற்று பேச உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாவட்டம் வாரியாக மக்கள் சந்திப்பு பரப்புரை பயணம் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, அவரது நிகழ்ச்சிக்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுச்சேரி, ஈரோடு, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்துவதற்காக அந்த மாவட்டத்தின் செயலாளர் ஆர். விஜய் மற்றும் கட்சியினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா. ராஜாராமிடம் கடந்த சில நாள்களுக்கு முன்பு அனுமதி கோரி மனு அளித்திருந்தனர். இது தொடர்பாக, மாவட்ட காவல்துறை விரிவான ஆய்வு மற்றும் ஆலோசனை மேற்கொண்டு பதிலளிப்பதாக தெரிவித்திருந்தது.
தஞ்சாவூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்துக்கு அனுமதி
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமி பட்டி பிரிவு சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்துவதற்கு மாவட்ட காவல்துறை இன்று திங்கள்கிழமை ( மார்ச் 2) அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வருகிற மார்ச் 4-ஆம் தேதி ( புதன்கிழமை) தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேச உள்ளார். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் படிக்க: திமுக அளிக்கும் 25 இடங்களை ஏற்ககூடியது அல்ல… கிரிஷ் சோடங்கரின் பேச்சால் பரபரப்பு




கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை
இவர்களுக்காக தமிழக வெற்றிக் கழகம் தலைமை சார்பில் கியூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. மேலும், கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கான குடிநீர் வசதி, கழிவறை வசதி, வாகனங்கள் நிறுத்தும் இடம், நிர்வாகிகள் அமருவதற்கான இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு பரப்புரை பயணம் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று அரசியல் பேசி வருகிறார்.
தஞ்சாவூரில் விஜய் என்ன பேசப்போகிறார்
அண்மையில் வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் திமுக மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து விஜய் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசி இருந்தார். இதனால், தஞ்சாவூரில் நாளை மறுநாள் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பெருதளவில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சூடு பிடிக்கும் தேர்தல் களம்… பல்வேறு வண்ணங்களில் தீவிரமாக தயாராகும் கட்சி கொடிகள்!