Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இது தமிழ்நாடா, வடநாடா? 52 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு!!

வடமாநிலங்களில் மட்டுமே காண நேரிடும் இதுபோன்ற காட்சிகள், தற்போது தமிழகத்திலும் அரங்கேறியுள்ளது. தனியார் கம்பெனியில் குறைந்த ஊதியத்திற்கான வெறும் 52 காலி பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்களும், இளம்பெண்களும் முண்டியடித்துக்கொண்டு நின்ற நிலை வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இது தமிழ்நாடா, வடநாடா? 52 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு!!
52 பணியிடங்களுக்கு குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Nov 2025 10:54 AM IST

கிருஷ்ணகிரி, நவம்பர் 22: காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் 52 பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாமுக்கு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீப காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்காது என்ற அளவில் அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டதோடு, தங்களுக்கு இந்த வேலை கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் முண்டியடித்துக்கொண்டு தங்கள் பயோ-டேட்டாவை நிறுவன ஊழியர்கள் கையில் திணித்தபடி இருந்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை அறிந்து கொள்ள முடிவதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also read : தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

52 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பேர்வே எண்டர்பிரைசஸ்என்ற காலணி தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து 8 கி.மீ, சுற்றளவில் உள்ள நபர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுக்கு பின்பு, இங்கு 52 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில், காலியிடங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் கம்பெனிக்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்து. இந்த பணியிடங்களுக்கான நேர்காணலுக்கு நூறு பேர் வருவார்கள் என அந்நிறுவனம் எதிர்பார்த்திருந்ததாக தெரிகிறது.

பயோ-டேட்டாவை கொடுக்க முண்டியடித்தக் கூட்டம்:

இதனிடயே, வேலைவாய்ப்பு குறித்து அறிந்த உள்ளூர் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் மட்டும் அல்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் தங்களது பயோடேட்டாவுடன் நிறுவனத்தின் முன்பு ஆயிரக்கணக்கில் குவிந்தனர். ஆயிரக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாக திரண்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போச்சம்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கம்பெனிக்குள் அழைத்து நேர்காணல் வைக்க முடியாத நிலை ஏற்பட, அலுவலகம் முன்பு வைத்தே விண்ணப்பங்களை அந்நிறுவனம் வாங்கியது.

இந்த வேலையாவது கிடைத்துவிடாதா என்ற ஏக்கம்?

குறைவான ஊதியம் வழங்கினாலும் பராவாயில்லை, அந்த வேலையாயாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருப்பதாக தெரிகிறது. அதோடு, அலுவலகத்தின் வெளியே அவர்கள் விண்ணப்பங்களை பெற்றபோது, அனைவரும் முண்டியடித்துக் கொண்டு தங்கள் பயோடேட்டாவை வழங்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை அச்சமடைய செய்துள்ளது.

Also read: தமிழகத்தில் 95.58% SIR படிவங்கள் விநியோகம்: தலைமை தேர்தல் ஆணையம் தகவல்!

சமூக ஆர்வலர்கள் கவலை:

இதுபோன்ற காட்சிகள் வடமாநிலங்களில் மட்டுமே காண நேரிடும். ஆனால், தற்போது தமிழ்நாட்டிலேயே இப்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் பெரும் வேலையில்லா திண்டாட்டம் உருவாகியுள்ளதை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.