Rain Alert: தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை, அம்மாதம் முழுவதும் பரவலாக மழைப் பொழிவை அளித்தது. தொடர்ந்து, அம்மாத இறுதியில் மோந்தா புயல் உருவாகி ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடந்தது. இதனால், தமிழகத்திற்கு ஓரளவு மழை பொழிவு இருந்தாலும், அதன் பின் மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்டது.
சென்னை, நவம்பர் 21: வங்கக்கடலில் புதிதாக ஒ்ரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில் இன்ற 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (நவ.22) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நவ.24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : +2 மாணவி கொலை: பள்ளி மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை.. தலைவர்கள் கடும் கண்டனம்!!




தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்த, காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது. இதனால், இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து ஏற்படுகிறது. தொடர்ந்து, அவை எந்த திசையில் நகரும் என்பதைப் பொறுத்தே எந்தெந்த மாவட்டங்களில் மழை வாய்ப்பு இருக்கும் என்பதை கணிக்க இயலும்.
இன்று 10 மாவட்டங்களில் கனமழை:
அதன்படி, தமிழகத்தில் இன்று தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெயக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.அதோடு, கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாளை இந்த மாவட்டங்களில் கனமழை:
தொடர்ந்து, நாளை (நவ.22) ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலுார், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : குளுகுளுவென மாறிய சென்னை.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் கனமழை..
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில், 15 செ.மீ., மழை பெய்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.