“தமிழக அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறும்”.. பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு!!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமார் மட்டுமல்லாமல், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்களிப்பும் முக்கியமானது என்று பிரேமலதா விஜயகாந்த் புகழ்ந்துள்ளார். அதோடு, அம்மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வரலாற்று சிறப்பு மிக வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதுரை, நவம்பர் 17: 2026ஆம் ஆண்டில் தமிழக அமைச்சரவையில் தேமுதிக இடம் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக கூறி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. அதோடு, இந்த கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி உறுதியளித்திருந்தார். எனினும், தேர்தலில் தோல்வியை தழுவியதால், அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் சுமூக போக்கை கையாளவில்லை. இந்நிலையில், ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக கடைசி நேரத்தில் தங்களுக்குக் கைவிரித்ததால் அந்தக் கூட்டணியை விட்டு பிரேமலதா வெளியேறினார்.
எகிறும் தேர்தல் கூட்டணி எதிர்பார்ப்பு:
தொடர்ந்து, அவர் தவெக உடன் கூட்டணி அமைப்பாரா? அல்லது திமுக உடன் கூட்டணி அமைப்பரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில், அமைச்சரவையில் தேமுதிக இடம் பெறும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். ஏற்கெனவே, தவெக கூட்டணிக்கு வரும் கட்சிக்கு ஆட்சியில் அதிகாரம் வழங்கப்படும் என்று விஜய் கூறியிருந்தார். இந்நிலையில், பிரேமலதாவின் பேச்சு தவெக உடன் கூட்டணி அமைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவ, விஜய்யுடன் கூட்டணி அமைக்க பாஜக, அதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. அந்தவகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத புதிய கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
இதையும் படிக்க : “2026 தேர்தலில் திமுக-தவெக இடையே மட்டும் தான் போட்டி”.. அடித்துச் சொல்கிறார் டிடிவி தினகரன்




தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் ‘இல்லம் தேடி, உள்ளம் நாடி’ சுற்றுப்பயணத்தின் மூன்றாம் கட்டத்தை பிரேமலதா மதுரையில் நேற்று தொடங்கினார். இதற்கு முன்னர், மாநகர் தெற்கு மாவட்டம் சார்பில் கூடல்நகரில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த் அவர்களின் குருபூஜையும், ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடும் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் மற்ற கட்சிகளுக்கு இணையாக நாமும் பூத் கமிட்டிகளை அமைத்துள்ளோம் என்றார்.
எதிர்கால எம்எல்ஏக்கள், அமைச்சர்கள்:
மேலும் பேசிய அவர், அடுத்த தேர்தலுக்கான தயாரிப்பை தொடங்குங்கள்; தேர்தல் முன்கூட்டியே நடைபெற வாய்ப்பு உள்ளது. SIR குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், தங்களும் குடும்பத்தினரும் வாக்கை தவறாமல் பதிவு செய்வதை உறுதி செய்யுங்கள் என்றார். நாம் இணையும் கூட்டணிதான் அடுத்த அரசு அமைக்கும். இங்கு இருக்கின்ற பலர் எதிர்காலத்தில் எம்எல்ஏக்களாக உயர வாய்ப்பு உள்ளது. கூட்டணி அரசில் அமைச்சரவை பொறுப்புகள் கிடைக்கும் சூழலும் உருவாகலாம்,” என்று அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதையும் படிக்க : நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
தமிழக அமைச்சரவையில் தேமுதிக:
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது, எந்தத் தேர்தலிலும் முடிவை முன்கூட்டியே கணிக்க முடியாது. தேர்தல் முடிந்த பின் நிலைமைகள் வேறுபடக்கூடும். 2026ல் கூட்டணி அமைச்சரவை உருவாக வாய்ப்பு அதிகம் என்று பல தரப்புகள் தெரிவிக்கின்றன. மதுரை மத்தி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் முன்பு தேமுதிக வென்ற தொகுதிகள் என்பதால், அங்கு நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் விரும்புகின்றனர். கடவுள் அருள் இருந்தால் நானோ அல்லது என் மகனோ போட்டியிடலாம் என்றார்.